

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,புதிய வட்டாட்சியர் குடியிருப்பு ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தார்.
மன்னார்குடி வ.உ.சி.சாலையில் 100 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாது இயங்கி வந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பதிலாக அனைத்து வசதிகளும் கொண்டு புதிய கோட்டாட்சியர் அலுவலகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது.
இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு ரூ.1 கோடியே 75 லட்சத்து 41 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யது. உடனடியாக கட்டுமானப் பணிகள் தொடங்கி கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், ஒரு ஆண்டுகாலமாக புதிதாக கட்டப்பட்ட மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. (இது குறித்து தினமணி நாகைப் பதிப்பில் சிறப்பு செய்தி கட்டுரையும் செப்டம்பர் மாதம் வெளிவந்தது)
இந்நிலையில்,புதன்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தப்படி காணொலிக் காட்சி வாயிலாக புதிதாக கட்டப்பட்ட மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டடத்தினை திறந்து வைத்தார்.
இதேபோன்று,மன்னார்குடி வடக்குவீதியில் ரூ.28.81 லட்சத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய வட்டாட்சியர் குடியிருப்பினையும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையொட்டி, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு மரக்கன்றினை நட்டார்.
நிகழ்ச்சியில், தஞ்சை மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் பா.காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏக்கள் பூண்டி கே.கலைவாணன்(திருவாரூர்), க.மாரிமுத்து(திருத்துறைப்பூண்டி), மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜி.பாலு, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் த.ஆழகர்சாமி, மன்னார்குடி வட்டாட்சியர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.