
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வருமானத்துக்கு அதிகமாக முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரூ.11.32 கோடி சொத்துக்களை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனடிப்படையில் வியாழக்கிழமை அதிகாலை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கேரகோட அள்ளி கிராமத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் மாதேஷ் என்பவருடைய வீடு, தருமபுரி அருகே இலக்கியம்பட்டி யிலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமியின் வீடு, தருமபுரி நேரு நகரில் உள்ள முன்னாள் அமைச்சரின் அன்பழகன் உதவியாளர் பொன்னு வேல் என்பவரின் வீடு உள்பட 41 இடங்களில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கே.பி.அன்பழகன் உறவினர் சிவகுமார் என்பவர் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை நடைபெற்று வருகின்றது. அங்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஆதிராஜாராம், வழக்கறிஞர் சதாசிவம், பாசறை பாலச்சந்தர் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டனர்.
முன்னதாக, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, தங்கமணி, வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.