மழையால் பாதித்த பயிர்களுக்கு ரூ.97.92 கோடி நிவாரணம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

வடகிழக்கு பருவமழையின்போது பாதித்த பயிர்களுக்கு ரூ.97.92 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழையின்போது பாதித்த பயிர்களுக்கு ரூ.97.92 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக பெரு கன மழை பெய்தது. முதற்கட்டமாக 25.10.21 முதல் 04.11.21 வரை பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது. இரண்டாவது கட்டமாக 07.11.2021 முதல் 11.11.2021 வரை பெய்த மழையால் வட மாவட்டங்களில் மிகுந்த பயிர் பாதிப்பு ஏற்பட்டது. மூன்றாவது கட்டமாக 17.11.21 முதல் 11.12.21 வரை மழை தொடர்ந்து நீடித்ததால் இதர மாவட்டங்களிலும் பயிர் சேதமடைந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 711.60 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. இது இயல்பை விட 59 சதவீதம் கூடுதலாகும்.

கனமழையினை தொடர்ந்து அமைச்சர்கள் குழு 12.11.2021 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதநிலையை ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்தது. மேலும், முதலமைச்சர் 13.11.2021 அன்று டெல்டா மாவட்டங்களையும் 15.11.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிர் சேத நிலையை நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில் 16.11.2021 அன்று பயிர்சேதங்கள் குறித்த அறிக்கையினை அமைச்சர் பெருமக்கள் குழு பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. முதல்வர் 16.11.2021 ஆம் தேதி வட கிழக்கு பருவ மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு கீழ்க்கண்டவாறு நிவாரணநிதி உதவி வழங்கிட ஆணையிட்டார்.

அறுவடைக்கு தயாராக இருந்த கார் குறுவை சொர்ணவாரி பயிர்கள் முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக எக்டர் ஒன்றுக்கு ரூ.20,000/- வழங்கிடவும் சம்பா பருவத்தில் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்திட எக்டர் ஒன்றுக்கு ரூ.6038/-மதிப்பீட்டில் குறுகிய கால நெல் விதை, நுண்ணுட்ட உரம், யூரியா மற்றும் DAP அடங்கிய இடுபொருட்கள் வழங்கிட முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் சம்பா பருவத்தில் பாதிப்படைந்த இளம் பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.6038/- என்ற வீதத்தில் நிதியாக அளித்திட முடிவு எடுக்கப்பட்டது.

கன மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக கணக்கெடுப்பு செய்திட ஏதுவாக அமைக்கப்பட்ட கிராம அளவிலான குழுவானது சேத மதிப்பீட்டின் ஆய்வை தொடங்கியது. இந்நிலையில் அக்டோபர் 25 முதல் டிசம்பர் 11 -ஆம் தேதி வரை தொடர் மழையிருந்ததால் பயிர் சேத மதிப்பீடு செய்வதில் தடங்கல் ஏற்பட்டது. டிசம்பர் மாதம் 11-ஆம் தேதிக்கு பிறகு பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களின் விபரம் கணக்கெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பயிர்பாதிப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சேதமடைந்த 4,44,988 ஏக்கர் பரப்பளவிற்குரிய 3,16,837 விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.168 கோடியே 35 இலட்சம் முதல்வரால் விடுவிக்கப்பட்டது. 

பயிர் நிவாரணத் தொகை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு 06.01.2022 அன்று வழங்கப்பட்டது. வேளாண் பெருமக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் மத்திய அரசின் பேரிடர் நிதியை எதிர்பார்த்து காத்திராமல் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் மாநில அரசின் நிதிமூலம் ரூ.168.35 கோடி விடுவித்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி விபரங்களை சரிபார்க்கும் பணி முடிவடைந்து மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாகவும், வங்கிகளின் விடுமுறை காரணமாகவும், நிவாரண நிதி விடுவிப்பதில் சிறு தடங்கல் ஏற்பட்டது.

தற்போது வரை சேதமடைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணமாக ரூ.97.92 கோடி 2,23,788 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு
வைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய விவசாயிகளுக்கு நிவாரண நிதி விடுவிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டு நாட்களில் வரவு வைக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com