அரசின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் காலரா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: எல்.முருகன்

புதுவை அரசின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் காலரா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
அரசின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் காலரா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: எல்.முருகன்
Published on
Updated on
1 min read

காரைக்கால்: புதுவை அரசின் தீவிர நடவடிக்கையால் காரைக்காலில் காலரா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த அவரை மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

காரைக்கால் அம்மையார் கோயிலுக்குச்  சென்ற அமைச்சரை,  கோயில் அறங்காவல் வாரியத்தினர் வரவேற்றனர். பின்னர் அம்மையார்  சன்னதியில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். மாங்கனித் திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, இதுதொடர்பான  விவரங்களைக் கோயில் நிர்வாகத்தினர் அமைச்சருக்கு விளக்கிக் கூறினர்.

இதைத் தொடர்ந்து  வயிற்றுப்போக்கு பாதிப்பால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெறுவோரை மத்திய அமைச்சர்  நேரில் பார்வையிட்டு உணவுப் பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினார். அவருடன் புதுவை உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர்  ஆர்.லோகேஸ்வரன் மற்றும் மருத்துவ அதிகாரிகள், மாநில  பாஜக தலைவர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மருத்துவமனை வாயிலில் செய்தியாளர்களிடம் இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது:

காரைக்காலில் கடந்த ஒன்றரை மாதமாக வயிற்றுப்போக்கு  பாதிப்பு பலருக்கு இருந்துவருகிறது. அரசின் துரிதமான நடவடிக்கையால் காலரா  பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது  மருத்துவமனையில் 24  பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதுதவிர, சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோர் குடியிருப்புப்  பகுதிகளுக்குச் சென்று மருத்துவ  உதவி வழங்கல், தூய்மைப் பணி என செய்து வருகின்றனர்.

காரைக்கால் மருத்துவமனைக்கு வருவோருக்கு தகுந்த சிகிச்சை தரப்படுவதால் விரைவாகக் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.  மக்கள்  இப்பிரச்னை குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com