கூத்தாநல்லூரில் பக்ரீத் கூட்டுத் தொழுகை!
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், பள்ளி வாயில்களில் பக்ரீத் பண்டிகை எனச் சொல்லக் கூடிய தியாகத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை நடத்தினர்


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், பள்ளி வாயில்களில் பக்ரீத் பண்டிகை எனச் சொல்லக் கூடிய தியாகத் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை நடத்தினர்.
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் , பக்ரீத் என அழைக்கக் கூடிய தியாகத்திருநாள் பண்டிகையையும் வெகுச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி வாயில்கள் மூடப்பட்டிருந்தன.
தினமும் நடத்தப்படும் தொழுகை மற்றும் ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட அனைத்து தொழுகைகளையும் அவரவர்களின் இருப்பிடத்திலேயே தொழுகை நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு, கரோனா நேரத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், பள்ளி வாயில்களில் தொழுகை நடத்தப்பட்டன. ஆனாலும், முழுமையாக பங்கேற்க முடியவில்லை.
தற்போது, சுமூக நிலைக்கு வந்து விட்டதால், வழிப்பாட்டுத் தலங்கள் முழுமையாகத் திறக்கப்பட்டன. அதன்படி, தியாகத் திருந்தாள் தொழுகையை பள்ளி வாயில்களில் மகிழ்ச்சியுடன் நடத்தினர்.சின்ன சிங்கப்பூர் என பாசத்துடன் அழைக்கப்படும் கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாயில் வளாகத்தில், இமாம் ஏ.எல்.முகம்மது அலி உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து, ஏராளமானவர்கள் கூட்டுத் தொழுகை நடத்தினர்.

கூத்தாநல்லூர் மேலப் பள்ளியில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
இதேபோல், மேலப்பள்ளி, சின்னப் பள்ளி, மஸ்ஜித் கதீஜா பள்ளி, ரஷீதியா பள்ளி, ஹமீதிய்யா பள்ளி, அன்வாரியா பள்ளி, ரஹீமீய்யா பள்ளி, சிஷ்தி நகர் பள்ளி, தைக்கால் பள்ளி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி உள்ளிட்ட 21 பள்ளி வாயில்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் தொழுகை நடத்தினர்.
மேலும், இதே போல், பொதக்குடி என்.ஏ.நூருல் அமீன் விளையாட்டு மைதானத்தில், பொதக்குடி பெரியப் பள்ளிவாயில் இமாம் பி.ஹெச்.ஸலாஹுதீன் பாஜில் பாகவி உரை நிகழ்த்த, மேலப்பள்ளி வாயில் இமாம் அபுல் ஹஸன் ஷாதலி தொழுகை நடத்தினார்.

கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயிலில் தியாகத் திருநாள் தொழுகை
தொழுகையில், பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கம், பெரியப்பள்ளி வாயில், மேலப்பள்ளி வாயில், பாத்திமா பள்ளி வாயில், ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் பள்ளி வாயில் உள்ளிட்ட பள்ளி வாயில்களைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
மேலும், பூதமங்கலம், அத்திக்கடை, தண்ணீர் குன்னம் உள்ளிட்ட பள்ளிவாயில்களிலும் தொழுகை நடத்தினர். தொழுகைக்குப் பிறகு, அனைவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, குர்பானி எனச் சொல்லக் கூடிய ஆடுகள் அறுக்கப்பட்டன.
அறுக்கப்பட்ட ஆடுகளை 3 பங்காகப் பிரித்து, தனக்கு ஒரு பங்கு எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, உறவினர்கள், நண்பர்கள், ஏழை, எளிய அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கி, மகிழ்ந்தனர். கரோனா தொல்லை இல்லாமல், பள்ளி வாயில்களில் தொழுகை நடத்துவதால் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
விடியற்காலையிலேயே குளித்து விட்டு, புத்தாடை அணிந்து பள்ளி வாயிலுக்குப் புறப்பட்டனர். ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்ச்சியாக தியாகத் திருநாளைக் கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...