சென்னையில் 12.3 டன் நெகிழி பறிமுதல்: ரூ. 10 லட்சம் அபராதம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை 12.3 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
சென்னையில் 12.3 டன் நெகிழி பறிமுதல்: ரூ. 10 லட்சம் அபராதம்
Published on
Updated on
1 min read

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை 12.3 டன் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகித சுருள், தாமரை இலை உட்பட 12 வகையான பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகரை அழகுப்படுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24.06.2022 முதல் 07.07.2022 வரை 10,573 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 12.3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.10,28,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com