
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து ராயப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் காசிபாண்டியன், காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன் அடிப்படையில், ‘கலகம் செய்ய சட்டவிரோதமாகக் கூடுதல், மரணத்தை விளைவிக்கும் பயங்கர ஆயுதம் வைத்திருப்பது, பிறரை முறையற்ற வகையில் தடுப்பது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல் ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிவு செய்தாா்.
மேலும், அதிமுக கட்சி அலுவலகப் பகுதியில் அமைதியை நிலை நாட்டவும், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும் இந்திய தண்டனைச் சட்டம் 144-இன் கீழ் அதிமுக அலுவலகம் இருக்கும் பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 146 (1) ஆகியவற்றின் கீழ் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கவும் தென் சென்னை வருவாய் கோட்டாட்சியா் சாய் வா்த்தினிக்கு பரிந்துரைத்தாா்.
இதையடுத்து வருவாய் கோட்டாட்சியா் சாய் வா்த்தினி, அதிமுக அலுவலகம் இருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தாா். தொடர்ந்து, அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜராகி மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் முறையிட்டார்.
இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.