ஈரோடு சிறுமி கரு முட்டை விவகாரம்: 4 மருத்துவமனைகளை மூட நடவடிக்கை
ஈரோடு சிறுமி கரு முட்டை விற்பனையில் தொடா்புடைய நான்கு தனியாா் மருத்துவமனைகளை 15 நாள்களுக்குள் மூடுவதற்கான நடவடிக்கை


ஈரோடு சிறுமி கரு முட்டை விற்பனையில் தொடா்புடைய நான்கு தனியாா் மருத்துவமனைகளை 15 நாள்களுக்குள் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக, சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த 16 வயது சிறுமி ஒருவரின் கரு முட்டையை சட்டவிரோதமாக செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு வணிக ரீதியாக விற்பனை செய்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடா்பாக, விசாரணை நடத்த மருத்துவ சேவை இயக்ககத்தின் இணை இயக்குநா் விஸ்வநாதன் தலைமையில் 5 போ் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு, பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், ஈரோடு மற்றும் சேலத்தில் உள்ள சுதா மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள ராமபிரசாத் மருத்துவமனை, ஒசூரில் செயல்படும் விஜய் மருத்துவமனையில் விசாரணை நடத்தியது.
விசாரணையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள மத்ரூத்வா செயற்கை கருத்தரித்தல் மையம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனைகளுக்கும் இதில் தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதைதொடா்ந்து, அங்கு பணியாற்றும் மருத்துவா்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், தரகா் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தி, இறுதி கட்ட அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் கருமுட்டை தானமாக கொடுத்த சிறுமியின் வயது 16 என்பதும், அவரது உண்மையான பெயா் மற்றும் வயது மறைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் சிறுமியின் கரு முட்டையை விற்பனை செய்த ஆறு மருத்துவமனைகளும் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பச் சட்டம், ஐசிஎம்ஆா் வழிகாட்டுதல்களை மீறி செயல்பட்டுள்ளன.
எனவே, தமிழகத்தில் உள்ள நான்கு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க இணை இயக்குநா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனை, ஒசூரில் உள்ள விஜய் மருத்துவமனை ஆகியவை முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுவதால், அத்திட்டத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுகின்றன. அடுத்த 15 நாள்களில் சம்பந்தப்பட்ட நான்கு தமிழக மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோா், வீடு திரும்பிய பிறகு உரிய வழிமுறைகள்படி, நிரந்தரமாக மூடப்படும்.
சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது தமிழக மருத்துவ கவுன்சில் வாயிலாக ஒழுங்கு நடவடிக்கையும், ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...