அரிசி மீதான ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் 

அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என
அரிசி மீதான ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் 
Published on
Updated on
1 min read

அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தனது மோசமான ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொள்கையின் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் மீது பெரும் யுத்தத்தையே தொடுத்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியின் விகிதத்தை கடுமையாக உயர்த்தியதோடு, பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களை புதிதாக ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

அண்மையில் பைகளில் அடைத்து விறகப்படும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் இனிமேல் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய முடிவால் ஏழை எளிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கான விலையில் ஒரு கிலோவிற்கு ரூ 3 முதல் ரூ 5 வரையிலும் விலை அதிகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பணவீக்கத்தாலும், கடுமையான விலைவாசி உயர்வினாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் மேலும் துயரத்தின் பிடியில் தள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.

மத்திய அரசின் இத்தகைய மோசமான முடிவை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரிசி ஆலைகள், மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளதோடு, தமிழகம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலுங்கானா, சத்தீஷ்கர், மேற்குவங்கம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறுகின்றன.

மத்திய பாஜக அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீது விதித்துள்ள ஜி.எஸ்.டி வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள இதர பொருட்கள் மீதான வரி விகிதத்தையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com