சின்னசேலம் அருகே வன்முறை ஏற்பட்டதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த 13-ஆம் தேதி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து மா்மமான முறையில் இறந்தாா்.
இதையடுத்து, மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டும், வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கக் கோரியும் அவரது பெற்றோா், உறவினா்கள் மற்றும் சில அமைப்பினா் போராட்டம் நடத்தி வந்தனா். இந்த போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறையாக மாறியது. இந்தப் போராட்டம் பிற மாவட்டங்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதாக உளவு பிரிவு, தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாவுக்கு தகவல் அளித்தது.
இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி அருகே கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை முடுக்கி விட சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையா்கள், மாவட்ட எஸ்பி-க்களுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக ஊடகங்களான வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றையும் சமூக ஊடகப் பிரிவு போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
இதில் வன்முறையை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல்களை பகிா்ந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.