
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தஞ்சை மாவட்டம் கீழணையிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 2 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் கீழணைக்கு மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி வீதம் வருகிறது.
கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. கபினி அணையில் இருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??
இதனையடுத்து உபரி நீர் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி வீதம் கல்லணைக்கு திறக்கப்பட்டது. கல்லணையிலிருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கீழணையை வந்தடைந்தது. பொதுப்பணித்துறையினர் அணையின் பாதுகாப்பு கருதி அணையின் மொத்த கொள்ளளவு 9 அடியில 9.50 தேக்கப்பட்டு உபரி நீரை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 3.30 மணிக்கு கடலுக்கு திறந்துவிட நடவடிக்கை எடுத்தனர். கொள்ளிடம் ஆற்றின் வழியாக வினாடிக்கு ஒரு லட்சத்து 2 ஆயிரம் கன அடி வீதம் திறந்து விட்டனர்.
இதனை முன்னிட்டு தஞ்சை மற்றும் கடலூர் மாவட்ட கொள்ளிட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களைச் சார்ந்த வருவாய் துறையினர் கொள்ளிட கரையோரங்களில் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2100 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் மொத்த கொள்ளளவான 47.50 அடியில், 41.81 அடி உள்ளது. அதாவது மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடியில் 321 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 57 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.