குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத் தலைவர் பதவி குறித்து தகவல்கள் சொல்வது என்ன?
குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??
குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத் தலைவர் பதவி குறித்து தகவல்கள் சொல்வது என்ன?

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களித்து வருகிறார்கள்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பாஜக கூட்டணி சாா்பில் திரௌபதி முா்முவும் எதிா்க்கட்சிகள் சாா்பில் யஷ்வந்த் சின்ஹவும் போட்டியிடுகின்றனா்.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் என சுமாா் 4,800 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்கின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவை வளாகங்களிலும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய  வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதையடுத்து புதிய குடியரசுத் தலைவா் ஜூலை 25-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வாா்.

ஒருவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் அவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று வரைமுறை உள்ளது.

அதன்படி, முதல் விதி என்னவென்றால், 

1. ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். இந்தியக் குடிமகன் அல்லாதோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

2. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட 35 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

3. மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்வாகத் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

யார் போட்டியிட முடியாது?

ஒருவர், இந்திய அரசுத் துறையிலோ அல்லது இந்திய அரசுப் பதவியிலோ மாநில அரசிலோ அல்லது உள்ளூர் அரசு அமைப்பிலோ எந்தப் பதவியையும் வகிக்கக் கூடாது, அது மட்டுமல்லாமல் மத்திய அரசின் எந்தத்துறையிலும் நிர்வாகப் பதவியில் இருக்கக் கூடாது.

இந்த தகுதியுடைய ஒருவரே, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம். இந்த தகுதியுள்ளவர்களின் வேட்புமனுக்கள்தான் ஏற்கப்படும். இதில், குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் விதமும், உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் மதிப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஊதியம் எவ்வளவு?

ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் அவருக்குக் கிடைக்கும் ஊதியம் மாதந்தோறும் சுமார் ரூ.5 லட்சம். நாட்டிலேயே ஒருவருக்கு அரசு அளிக்கும் அதிகப்படியான ஊதியம் என்றால் அது குடியரசுத் தலைவருக்கான ஊதியம்தான்.

கடந்த 2018ஆம் ஆண்டுதான், குடியரசுத் தலைவருக்கான ஊதியம் ரூ.1.50 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இந்த மாத ஊதியம் மட்டுமல்லாமல் பல்வேறு படிகளும் வழங்கப்படும்.


குடியரசுத் தலைவர் எங்கு வசிப்பார்?

இந்த உலகிலேயே மிகப்பெரிய இல்லமாகக் கருதப்படுவது இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் மாளிகை என்றே சொல்லலாம்.  அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை விடவும் இது பெரியது, அழகு மிகுந்தது என்கிறார்கள். இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இதனைக் கட்டி முடிக்க ரூ.1 கோடியே 40 லட்சம் செலவாகியிருக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில் இது மிகப்பெரிய தொகை.

குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படும் நபர், புது தில்லியில் உள்ள இந்த புகழ்பெற்ற குடியரசுத் தலைவர் மாளிகையில்தான் வசிப்பார்.

வரவேற்பு அறைகள், விருந்தினர்களுக்கான அறைகள், குடியரசுத் தலைவரின் அலுவலகம் உள்பட சுமார் 350 அறைகளைக் கொண்ட முக்கிய கட்டடம் அமைந்திருக்கும் 320 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது குடியரசுத் தலைவர் எஸ்டேட் பகுதி. இங்குதான் மிகப்பெரிய மொகல் கார்டன் எனப்படும் பூந்தோட்டம், பாதுகாவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள், இதர அலுவலகங்களும் அமைந்துள்ளன.

குடியரசுத் தலைவருக்கான வாகனம்?

காலம் மாற மாற வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் குடியரசுத் தலைவர் பயணிக்கும் வாகனமும் மேம்படுத்தப்படும். குடியரசுத் தலைவர் பயன்படுத்தும் வாகனத்தின் தயாரிப்பு, மாடல், பதிவு எண் என அனைத்தும் உள்துறை அமைச்சகத்தால் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

இந்த வாகனங்களுக்கு வாகனப் பதிவு எண் அல்லது உரிம எண் இல்லாமல் தேசியச் சின்னம் இடம்பெற்றிருக்கும். 


குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.
குடியரசுத் தலைவரின் துணைவருக்கு செயலக உதவிகளுக்கு ரூ.30 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும்.
முழுமையாக மரவேலைப்பாடு செய்யப்பட்ட, வாடகை இல்லாத எட்டாம் வகை மாளிகை ஒன்று வாசிப்பதற்கு வழங்கப்படும்.
இரண்டு தொலைபேசிகளும், செல்லிடப்பேசி சேவையும் வழங்கப்படும்.
5 ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம். இவர்களுக்கான ஊதியச் செலவு ரூ.60 ஆயிரமாகும்.
தனது துணையுடன் ரயில் மற்றும் விமானத்தில் செல்வதற்கான பயணச் செலவு முழுக்க இலவசம் என்கிறது தகவல்கள்.

எத்தனை முறை போட்டியிடலாம்?
ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரே மீண்டும் ஒரு முறை போட்டியிடலாம். அதன்படி, குடியரசுத் தலைவர் பதவிக் காலம் இரண்டு முறைக்கு மேல் நீடிக்கக் கூடாது என்பது சட்டம். 

இந்த சட்டம் ஏன் வந்தது தெரியுமா?
அதிபர் மாளிகையில் அதிக காலம் வசித்தவர் என்ற சிறப்பு பெற்றவர் பாபு ராஜேந்திர பிரசாத். இடைக்கால அரசு பதவி வகித்த 2 ஆண்டுகளும் (1950 - 1952), அதனைத் தொடர்ந்து 2 முறை அதிபராகி 10 ஆண்டுகளும் சேர்த்து மொத்தம் 12 ஆண்டுகள் அங்கு வாசம் செய்தார். 

மூன்றாவது முறையும் அவர் போட்டியிட விரும்புகிறார் என்ற தகவல் கசிந்ததால், அதனைத் தடுக்கவென்றே, குடியரசுத் தலைவர் பதவிக் காலம் இரண்டு முறைக்கு மேல் நீடிக்கக் கூடாது என்ற தனிநபர் அரசியல் சட்டத்திருத்தத் தீர்மானம் 18.08.61ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com