கூத்தாநல்லூர்: வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் ஊரணிப் பொங்கலிட்டு படையல்!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பொங்கலிட்டு, படையல் செலுத்தினர்.
வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயிலில், ஊரணிப் பொங்கலிடும் சுமங்கலிப் பெண்கள்.
வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி கோயிலில், ஊரணிப் பொங்கலிடும் சுமங்கலிப் பெண்கள்.

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பொங்கலிட்டு படையல் செலுத்தினர்.

சிவபெருமானின் மாமனாரும், பார்வதிதேவியின் தந்தையுமான தச்சன் தன் வேள்வியை தகர்ததாலும், கோடி முனிவர்கள் மகா யாகம் செய்த நகர் ஆனதாலும் வேள்வி நகர் என்றும், தற்போது வேளுக்குடி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் அன்னை ஸ்ரீ அங்காளப் பரமேஸ்வரி அம்பாள் எழுந்தருளிய ஆலயம் அமைந்துள்ளது. 

அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி அம்மன்.
அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வேளுக்குடி அங்காளப் பரமேஸ்வரி அம்மன்.

திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள இக்கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். தச்சன் வேள்வி செய்த போது, தன் கணவர் ஈசனை அழைக்காததால் கோபம் அடைந்த பார்வதி தேவி விஸ்வரூபத்துடன் பெரியாச்சியாக, வேளுக்குடி வந்து அமர்ந்தாள். இறைவனான சிவபெருமான் அகோர வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்தார். 

மேலும், தச்சன் மற்றும் அவரது சகோதரர் எச்சன் முதலியோரை யாகம் செய்வித்த, யஷூப்பிரஜாபதி உள்ளிட்டோரின் தலைகளை அறுத்துக் கொண்டு வந்து அம்மனின் காலடியில் சேர்ப்பித்தார். இதனால், பார்வதி, ஸ்ரீ அங்காள அம்மனாக இங்கு காட்சி தருகிறார் என்பது வரலாறு. 

இக்கோயிலின் அங்காளப் பரமேஸ்வரியை, குலதெய்வமாகக் கொண்டுள்ளவர்கள் திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ளார்கள். ஆண்டுதோறும் இக்கோயிலில், கொடியேற்றத்துடன் மகா சிவராத்தி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும், ஆடி மாதம், தை மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் ஊரணிப் பொங்கல் என அழைக்கக் கூடிய, ஊர் மக்கள் ஒன்று கூடி, 108 க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் பொங்கல் வைப்பார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக உலகத்தையே ஆட்டிப்படைத்த கரோனா தொற்று நோயாலும், ஊரடங்கா லும் கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. 

பம்பை அடித்து, அம்பாளை அழைத்த காட்சி.

இந்நிலையில், தற்போது வழிப்பாட்டு தலங்கள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு உத்தரவுப்படி, வேளுக்குடி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வேளுக்குடி ஸ்ரீலஸ்ரீ சடையப்ப பூஜாரியார்கள் வி.எஸ்.ரமேஷ்குமார், வி.எஸ்.ராஜு மற்றும் கோயில் நிர்வாகிகளின் ஏற்பாட்டின்படி, ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, கோயிலின் முன்பு 25-க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள், சமூக இடைவெளியுடன் பொங்கலிட்டனர். 

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஊரணிப் பொங்கலிடப்பட்டதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டனர். தொடர்ந்து, அங்காளம்மனுக்கு, அரிசி மாவு, பன்னீர், தேன், தயிர், இளநீர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பொங்கல் படையிலிட்டு, மகா தீபாராதனைக் காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அங்காளப் பரமேஸ்வரியை, பயபக்தியுடன் வணங்கினர். ஊரணிப் பொங்கல் ஏற்பாடுகளை, ஆர்.சரபோஜி, ஆர்.சதீஸ்குமார் மற்றும் பக்தர்கள் கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com