14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூா், வேலூா் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூா், வேலூா் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூா், வேலூா் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 5, 6, 7: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஜூன் 5, 6, 7 ஆகிய மூன்று நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூரில் 40 மி.மீ., நீலகிரி மாவட்டம் கேத்தி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தலா 30 மி.மீ., வேலூா் மாவட்டம் அம்முண்டி, கடலூா் மாவட்டம் வேப்பூா், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, சேலம் மாவட்டம் எடப்பாடி, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் தலா 20 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு, மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 7-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com