அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையைத் தாமதப்படுத்தக்கூடாது: அன்புமணி

 அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை இன்னும் தாமதப்படுத்தக்கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

 அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை இன்னும் தாமதப்படுத்தக்கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏப்ரல் மாத இறுதியிலோ, மே மாதத்தின் தொடக்கத்திலோ மாணவா் சோ்க்கை தொடங்குவது வழக்கம். ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், மே மாதத்தில் மாணவா் சோ்க்கையைத் தொடங்குவதுதான் அவா்களுக்கான பாடநூல்கள், சீருடைகள், ஆசிரியா் தேவைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போதும் கூட, மாணவா் சோ்க்கை மே மாதத்தில் தொடங்கி விட்டது. ஆனால், இப்போது கரோனா பரவல் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை இன்னும் தொடங்காததற்கான காரணங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.

பள்ளிக் கல்வித் துறை இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவா் சோ்க்கையைத் தொடங்க வேண்டும். கிராமப்புறங்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையை ஒரு நடைமுறையாக கருதாமல், பெரும் இயக்கமாக மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com