எதிர்க்கட்சி நோக்கமல்ல; ஆளும் கட்சியாக மாற வேண்டும்

எதிர்க்கட்சியாக இருப்பது பாஜகவின்  நோக்கமல்ல; தமிழகத்தில் ஆளும்கட்சியாக மாற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
எதிர்க்கட்சி நோக்கமல்ல; ஆளும் கட்சியாக மாற வேண்டும்

சேலம்: எதிர்க்கட்சியாக இருப்பது பாஜகவின்  நோக்கமல்ல; தமிழகத்தில் ஆளும்கட்சியாக மாற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

சேலத்தை அடுத்த ஏற்காடு, நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம்  பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பேசியது:

நெல் உள்பட 14 விளைபொருட்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி இருப்பது விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நெல்லுக்கு மட்டும் கடந்த 8 ஆண்டுகளில் 58 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆதரவு விலையை உயர்த்தி விவசாயிகளின் பாதுகாவலராக பிரதமர் மோடி திகழ்கிறார்.

மேக்கேதாட்டு அணை கட்டப்படக் கூடாது என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்பதாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எழுத்துபூர்வமாக உறுதி அளித்துள்ளோம். தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் அனுமதியில்லாமல் மேக்கேதாட்டுவில் அணை கட்டிவிட முடியாது.

தமிழக அரசின் ஊழல் குறித்துப் பேசினாலே வழக்கு தொடர்வது வழக்கமாக உள்ளது. வழக்குகளால்  வாயை அடைத்துவிட முடியும் என்று திமுக அரசு நினைப்பது தவறு. எந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. 

ஊழலை மறைக்க அரசு முயற்சித்தால், ஊர்ஜிதம் செய்த பின்னர் ஊழல் தொடர்பான இரண்டாவது பட்டியலை வெளியிடுவோம். இரண்டாவது பட்டியல் முதல் பட்டியலைவிட பத்து மடங்கு பெரிதாக இருக்கும். 

தமிழகத்தில் பாஜகவை திமுகதான் பிரதான எதிர்க்கட்சியாக உருவாக்கி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சியாக இருப்பது பாஜகவின்  நோக்கமல்ல. தமிழகத்தில் ஆளும்கட்சியாக பாஜக மாற வேண்டும். 

மதுரை ஆதீனம், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் விவகாரங்களில் மாநில அரசின் நடவடிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. தீட்சிதர் விவகாரத்தில்  உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தெளிவாக உள்ளது. அரசியலைத் தாண்டி செயல்படும் மதுரை ஆதீனம் போன்றவர்களை மிரட்டுவதை இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் அண்ணாதுரை,  மாவட்டத் தலைவர் சண்முகநாதன், எஸ்.டி. பிரிவு அணி மாநிலத் தலைவர் சிவபிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com