தமிழகத்தில் பரவலாக மழை: என்ன செய்திருக்கிறது அரசு?

மழைக்காலங்களில் பேரிடர்களை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்தப் பணிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பரவலாக மழை: என்ன செய்திருக்கிறது அரசு?
தமிழகத்தில் பரவலாக மழை: என்ன செய்திருக்கிறது அரசு?
Published on
Updated on
2 min read

தமிழத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழைக்காலங்களில் பேரிடர்களை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்தப் பணிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,  ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு, 336 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இது தமிழ்நாட்டின் வருடாந்திர இயல்பான மழை அளவில், 35.84 விழுக்காடு ஆகும். இந்த தென் மேற்கு பருவமழையின் காரணமாக, தமிழ்நாட்டில் 20.6.2022 முடிய 65.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும 85 விழுக்காடு கூடுதல் ஆகும்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் சென்னை மாவட்டத்திற்கு இயல்பாக 56 மி.மீ. மழை கிடைக்கப் பெறும் என்ற நிலையில், கடந்த 19.6.2022 அன்று ஒரே நாளில் சென்னை மாவட்டத்தில் 82.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இது கடந்த 6 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் பதிவான மழையைவிட மிக மிக அதிகம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், 24 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 5.73 மி.மீ. ஆகும்.

அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்

1) இராணிப்பேட்டை – 44.84 மி.மீ.
2) திருவள்ளூர் – 38.27 மி.மீ.
3) வேலூர் – 38.10 மி.மீ.
4) சென்னை – 35.65 மி.மீ.
5) காஞ்சிபுரம் – 25.82 மி.மீ.
6) நீலகிரி – 16.31 மி.மீ.
7) கோயம்புத்தூர் – 12.79 மி.மீ.
8) செங்கல்பட்டு – 11.88 மி.மீ.
9) விழுப்புரம் – 6.65 மி.மீ.
10) திருவண்ணாமலை – 5.00 மி.மீ.

கனமழை விபரம்
கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில், செங்குன்றம் பகுதியில் (78.0 மி.மீ.), திருவாலங்காடு பகுதியில் (75.0 மி.மீ.), பூண்டி பகுதியில் (66.0 மி.மீ.), இராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் பகுதியில் (77.4 மி.மீ.), வேலூர் மாவட்டத்தில், பொன்னை அணைப் பகுதியில் (72.6 மி.மீ.), விழுப்புரம் மாவட்டத்தில், மரக்காணம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் பகுதியில் (68.0 மி.மீ.) கன மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில், பரவலாக பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை, முதல்வரின் அறிவுரையின் பேரில், சென்னை மாநகராட்சி உட்பட தொடர்புடைய மாநகராட்சிகளும், மாவட்ட நிருவாகங்களும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் வண்ணம் சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. 

எனவே பொது மக்கள் மழை வெள்ளம் தொடர்பான தங்களது புகார்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். 
இதுமட்டுமின்றி, 94458 69848 என்ற வாட்ஸ்அப் எண் வாயிலாகவும், TNSMART செயலி மூலமாகவும் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.

மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்கள் அமைத்து, மழைக் காலங்களில் வரப்பெறும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த சில நாட்களில் பெய்த கனமழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், இன்று (21.6.2022) நண்பகல் 12 மணிக்கு, செம்பரம்பாக்கம் அணையிலிருந்து 250 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், மழைக்காலங்களில் அரசால் வெளியிடப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கவனிக்குமாறும், மழைக்காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன். அதே போன்று, மீனவர்கள், மீனவர்களுக்கான எச்சரிக்கை செய்திகளின் அடிப்படையில், ஆபத்தான பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வானிலை முன்னறிவிப்பு

இன்று (21.06.2022), நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (21.06.2022):
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில், கேரள கடற்கரை, லட்சத்தீவு பகுதியிலும், கர்நாடக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com