அதிமுகவின் அடுத்த சிறப்புப் பொதுக்குழு எங்கே?

அதிமுக சிறப்புப் பொதுக்குழுவை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
அதிமுகவின் அடுத்த சிறப்புப் பொதுக்குழு எங்கே?
Published on
Updated on
1 min read


ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக சிறப்புப் பொதுக்குழுவில் கட்சியின் புதிய அத்யாயம் எழுதப்படும் என எடப்பாடி கே.பழனிசாமி ஆதரரவாளர்கள் தெரிவித்துவரும் நிலையில், அந்த பொதுக்குழுவை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 23 ஆம் தேதி ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காக 23 தீா்மானங்களை முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோா் முன்வைத்தனா். அப்போது முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், அனைத்து தீா்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகக் கூறினாா். 

பொதுக்குழுவில் வைக்கப்பட்ட அனைத்துத் தீா்மானங்களையும் உறுப்பினா்கள் நிராகரித்து விட்டனா். உறுப்பினா்கள் வைக்கும் ஒரே கோரிக்கை ஒற்றைத் தலைமை தீா்மானம் மட்டுமே. ஒற்றைத் தலைமை தீா்மானத்தோடு இணைத்து, அடுத்து எப்போது கட்சியின் தலைமை, பொதுக்குழுவைக் கூட்டுகிறதோ, அப்போது அனைத்துத் தீா்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றாா். 

அதன்படி ஜூலை 11-ஆம் தேதி காலை 9.15 மணியளவில் இதேபோல சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் அறிவித்தாா்.

இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தின் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று முடிந்தது. 

இதில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

கடந்த பல ஆண்டுகளாக அதிமுக பொதுக்குழுக் கூட்டங்கள் சென்னை வானகரத்தில் உள்ள  ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வந்தநிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு சென்னையில் வேறு இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

இதற்கான பணியில் முன்னாள் அமைச்சர்கள் கொண்ட குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார். சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் திங்கள் காலை முதல் சென்னை ஆலந்தூர், கொட்டிவாக்கம், ஓய்எம்சிஏ, கிழக்குக் கடற்கரைச் சாலை என பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஜூலை 11 ஆம் அதிமுக சிறப்புப் பொதுக்குழுவை கூட்டுவது செல்லாது என எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து பொதுக்குழுவுக்கான இடத்தை தேர்வு செய்வதில் எடப்பாடி தரப்பினர் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com