யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மன்னார்குடியில் திமுக நகராட்சித் தலைவர் வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி: வேட்பாளர் மாற்றம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதில் திமுகவினரிடையே அதிருப்தி ஏற்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கட்சி தலைமை, வேட்பாளரை மாற்றியுள்ளது. 

News image
மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மன்னை த.சோழராஜன்.
Updated On :4 மார்ச் 2022, 4:00 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதில் திமுகவினரிடையே அதிருப்தி ஏற்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கட்சி தலைமை, வேட்பாளரை மாற்றி வியாழக்கிழமை இரவு அறிவிப்பு செய்தது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளுக்கு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 
திமுக 26 , அதிமுக 4 , அமமுக 2 , சுயேச்சை 1 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். இதில், 6-வது வார்டு திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட்-க்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த திமுகவைச் சேர்ந்த ஆர்.இந்திரா தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் திமுகவின் பலம் 27 ஆக உயர்ந்தது.

நகர்மன்றத் தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவைச் சேர்ந்த 18 வது வார்டு உறுப்பினர் மன்னை த.சோழ ராஜன், 21 வது வார்டு உறுப்பினர் சூ.மீனாட்சி , 13வது வார்டு உறுப்பினர் ப.ரவிச்சந்திரன் ஆகியோர் முயற்சி செய்தனர். இதில் மன்னை த.சோழராஜனுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினருக்கும் இருந்தது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி , புதன்கிழமை நடைபெற்றபோதும் , அங்கு நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் என்ற நிலையில் வைத்து நகராட்சி நிர்வாகமும், திமுகவினரும் மன்னை த.சோழராஜனுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

இந்நிலையில் , வியாழக்கிழமை திமுக தலைமை அறிவித்த பட்டியலில் மன்னார்குடி  நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக சூ.மீனாட்சி பெயர் இடம் பெற்றிருந்தது.

இதனால், மன்னார்குடியில் திமுகவினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு அதிர்வலையை உண்டாகி பெரும் சர்ச்சையை  உருவாக்கியது. இது மன்னார்குடி தொகுதி முழுவதும் அரசியல் கட்சியினரிடையே பேசும் பொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது .

திமுக உறுப்பினர்கள் மீனாட்சி, அவரது ஆதரவு உறுப்பினர் ஒருவரைத் தவிர மற்ற 25 பேரும் காந்தி சாலையில் உள்ள திமுக நகர அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு காரசார விவாதங்கள் நடந்தேறியது.

இதனிடையே , அங்கு வந்த திமுக மாவட்டச் செயலரும் திருவாரூர் எம்எல்ஏவுமான பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி திமுக நகரச் செயலர் வீரா.கணேசன் கட்சி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இது குறித்து திமுகவினரிடம் கேட்டபோது அவர்கள் தெரிவித்தது.

அறிவிக்கப்பட்ட மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் மீனாட்சிக்கு பதிலாக மன்னை த .சோழராஜன் பெயரை அறிவிக்க மாவட்ட நிர்வாகம் கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்யும் என்றும் அதற்குப் பதிலாக   நகர்மன்ற துணைத் தலைவராக மீனாட்சியை அறிவிக்க நகரக் கழகம் முன்மொழிய வேண்டும் என கருத்து வைக்கப்பட்டதாகவும் இதற்கு கட்சியினரிடமும் , நகர்மன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ளாததால் சமாதானப் பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாமல் தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது.

இதனை அடுத்து, திமுகவைச் சேர்ந்த 25 நகர்மன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றிருப்பதாக தெரிய வந்தது .
தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்க இன்று வெள்ளிக்கிழமை காலைக்குள் தலைவர் வேட்பாளரை மாற்றி, நகரக் கழகமும் அனைத்து திமுக நகர்மன்ற உறுப்பினர்களும் முன்மொழியும் வேட்பாளர்களை திமுக தலைமை அறிவிப்பு செய்தால் ரகசிய வாக்கெடுப்பில் கலந்துகொள்வது என்றும் இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவில் உள்ளனர்.

திமுகவைச் சேர்ந்த 25 பேர் தேர்தலை புறக்கணித்தால் தேர்தல் நடத்துவதற்கான போதிய எண்ணிக்கை இல்லாமல் தேர்தல் ஒத்தி வைக்க வாய்ப்பு நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் , மன்னார்குடி கட்சியினர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து அவர்களது கோரிக்கையை ஏற்று மன்னார்குடி நகர்மன்ற திமுக தலைவர் வேட்பாளராக மன்னை த.சோழராஜனை நியமித்து வியாழக்கிழமை இரவு அறிவிப்பு வெளியானது. இது திமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பாதுகாப்பாக ரகசிய இடத்தில் தங்கியிருந்த 25 திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வெள்ளிக்கிழமை அங்கிருந்து தனி வாகனத்தில் புறப்பட்டு மறைமுகத் தேர்தலில் பங்கேற்க மன்னார்குடிக்கு வந்து கொண்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.