கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

கல்லூரி மாணவா் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
கோகுல்ராஜ் | குற்றவாளி யுவராஜ்
கோகுல்ராஜ் | குற்றவாளி யுவராஜ்

கல்லூரி மாணவா் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். விசாரணையில், காதல் விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டனா். இவர்களில் 2 பேர் விசாரணையின் போதே இறந்து விட்டனர்

முதலில் இந்த வழக்கினை நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்த நிலையில், கோகுல்ராஜின் தாய் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில் மார்ச் 5 ஆம் தேதி இதன் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சம்பத்குமாா் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் 106 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 500 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, கல்லூரி மாணவா் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமாா் இன்று தீர்ப்பளித்துள்ளார்.  மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ், ஆகிய 5 பேர் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். மேலும், குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள் மீதான தண்டனை விவரம் வரும் மார்ச் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவிட்டார்.

முன்னதாக, கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com