852 மாணவர்கள் தமிழ்நாடு திரும்பி உள்ளனர் 

உக்ரைனில் இருந்து தில்லி வந்த 852 மாணவர்கள் தமிழக அரசு ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு திரும்பினர். 
852 மாணவர்கள் தமிழ்நாடு திரும்பி உள்ளனர் 

உக்ரைனில் இருந்து தில்லி வந்த 852 மாணவர்கள் தமிழக அரசு ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு திரும்பினர். 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் 05.03.2022 அன்று புதுதில்லி வந்தடைந்து, அன்றைய தினம் காலை 11.00 மணிக்கு மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேரில் சந்தித்து தமிழக மக்களை தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்கள். 
இக்குழுவின், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, எம். எம். அப்துல்லா, தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மேலாண்மை இயக்குனர் ஏ.கே. கமல் கிஷோர், இணை மேலாண்மை இயக்குனர் அஜய் யாதவ், மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இக்குழுவினர், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் புதுதில்லியில் தங்கியிருந்து மாணவர்களின் மீட்பு பணியை கண்காணிக்கும் பொருட்டு இன்று (06.03.2022) தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் உக்ரேனில் இருந்து வருகை தரும் மாணவர்களை உடனுக்குடன் தமிழ்நாட்டிற்கு தேவைக்கேற்ப தனி விமானம் ஏற்பாடு செய்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுதில்லி வரும் மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கி தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை உக்ரைனிலிருந்து தில்லி வந்தடைந்த 1011 மாணவர்களில் 852 மாணவர்கள் (தனி விமானத்தில் 180 மாணவர்கள் உட்பட) தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், இது தவிர தற்போது 159 மாணவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மாணவர்களை சிறப்பு குழுவினர் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர். தமிழ்நாடு செல்ல அணைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த தமிழ்நாடு முதல்வருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com