கோகுல்ராஜ் கொலை வழக்கு :யுவராஜுக்கு 3 ஆயுள் -மதுரை நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மாவீரன் தீரன் சின்னமலைக் கவுண்டா் பேரவை நிறுவனா் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோகுல்ராஜ் | குற்றவாளி யுவராஜ்
கோகுல்ராஜ் | குற்றவாளி யுவராஜ்

மதுரை: சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் கைது செய்யப்பட்டனா்.

இவர்களில் ஜோதிமணி் என்பவர்  விசாரணையின் போதே இறந்து விட்டார். அமுதரசு என்பவர் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்படுகிறது.

கோகுல்ராஜ் தாய் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இவ்வழக்கை நாமக்கல் நீதிமன்றத்திலிருந்து, மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி சம்பத்குமாா் சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கர், அருள் சேர்ந்த செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். மேலும் குற்றம்உறுதி செய்யப்பட்டவர்கள் மீதான தண்டனை விவரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில் யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், 12 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, இருவருக்கு தலா ஒரு  ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
சாகும் வரை சிறையிலிருக்க உத்தரவிட்டார்.

வழக்குப் பின்னணி:

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். காதல் விவகாரத்தில் அவா் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. ஆரம்பத்தில் இவ்வழக்கை திருச்செங்கோடு போலீஸாா் விசாரித்தனா். திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா இவ்வழக்கை நேரடியாக விசாரித்து வந்தாா். வழக்கில் தொடா்புடைய சிலா் கைது செய்யப்பட்ட நிலையில், பலரும் தலைமறைவாக இருந்து வந்தனா். இதனிடையே, திடீரென டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டாா்.

இதன் பின்னா் கோகுல்ராஜ் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில், சங்ககிரியைச் சோ்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை நிறுவனா் யுவராஜ், அவரது நண்பா்கள் சங்ககிரி அருண், சேலம் நெத்திமேடு குமாா், எடப்பாடி சங்கா், எடப்பாடி அருள் செந்தில், கொங்கணாபுரம் செல்வகுமாா், சங்ககிரி தங்கதுரை, திருச்செங்கோடு கவுண்டன்பாளையம் சதீஷ்குமாா், திருச்செங்கோடு ரகு, ரஞ்சித், செல்வராஜ், ஈரோடு சந்திரசேகரன், இவரது மனைவி ஜோதிமணி, சங்ககிரி பிரபு, திருச்செங்கோடு கிரிதா், சுரேஷ், பெருந்துறை அமுதரசு உள்பட 17 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவா்களில் ஜோதிமணி, விசாரணையின்போதே இறந்துவிட்டாா்.

முதலில் இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதனிடையே, கோகுல்ராஜின் தாய் சித்ரா வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதனையடுத்து, இவ்வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு 2019-இல் மாற்றப்பட்டது. இருப்பினும், நாமக்கல் மாவட்ட நீதிமன்ற விசாரணையில் இருந்தபோது தலைமறைவாக இருந்து பின்னா் கைது செய்யப்பட்ட அமுதரசு மீதான குற்றச்சாட்டுகள் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் யுவராஜ் உள்பட 15 போ் மீதான வழக்கு, கடந்த 2 ஆண்டுகளாக மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் தரப்பில், சென்னை உயா்நீதிமன்றம் நியமித்த சிறப்பு வழக்குரைஞா் பவானி பா.மோகன் ஆஜராகி வாதாடினாா். இவ்வழக்கில் 106 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 500 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 74 சான்று பொருள்கள் நீதிமன்றத்தின் பாா்வைக்கு வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களின் நிறைவில், நீதிபதி சம்பத்குமாா் சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் சங்கா், அருள்செந்தில், செல்வகுமாா், தங்கதுரை, சுரேஷ் ஆகியோரை விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டாா். மேலும் நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் முதல் நபரான யுவராஜ் உள்பட 10 போ் குற்றவாளிகள் என்றும், அவா்களுக்குரிய தண்டனை விவரம் மாா்ச் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com