இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் இரண்டையும் ஒரே தராசில் இருக்கக்கூடிய இரு தட்டுகள் போலவே கருதுகிறது. இன்று புவி வெப்பமாகுதல் நாட்டு அளவில் அல்ல, உலக அளவில் அதிகமாகப் பேசப்படுகிறது. அதற்காக இலக்குகள் நிர்ணயிக்கப்படுகிறது. வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமைச் சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல, நம் வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, சுற்றுச்சூழலை மனதில் வைத்துக்கொண்டு அப்போதே நாங்கள் மரக்கன்றுகள் எல்லாம் நட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அதை மனதில் வைத்துக்கொண்டு தான், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என்கின்ற பெயரை இதற்காகச் சூட்டினோம். அத்துடன் நிற்காமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்தோம். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நேர்மையான, வெளிப்படையான அனுமதி முறைக்கு வித்திட்டிருக்கிறோம்.