பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க பின்னலாடைத் தொழிலாளர்களுக்கு அழைப்பு

மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 28,29 ஆம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் திருப்பூரில் உள்ள பின்னலாடைத் தொழிலாளர்களும் பங்கேற்க வேண்டும்
திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற தொழிற்சங்க நிர்வாகிகள்.
திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற தொழிற்சங்க நிர்வாகிகள்.

திருப்பூர்: மத்திய அரசைக் கண்டித்து மார்ச் 28,29 ஆம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் திருப்பூரில் உள்ள பின்னலாடைத் தொழிலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்துக்கு தலைமை வகித்த ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.சேகர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது :

இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சம்மேளனங்கள் சார்பில் சார்பில் வரும் மார்ச் 28, 29 ஆம் தேதிகளில் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்சம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். பஞ்சு, நூல் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. 

இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும். 

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அனைத்து வியாபாரிகள் சங்கங்கள், வணிக நிறுவனங்கள், கடைகளுக்கும் பொது வேலை நிறுத்தம் தொடர்பாக துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.  

திருப்பூர் மாவட்டத்தில் வரும் வரும் மார்ச் 28 ஆம் தேதி திருப்பூர், பல்லடம், தாராபுரம், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட 8 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் மார்ச் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்றார். இந்த சந்திப்பின்போது, சிஐடியூ சார்பில் கே.ரங்கராஜ், சம்பத், எல்பிஎஃப் சார்பில் ஆர்.ரெங்கசாமி, மகேஷ், ஐஎன்டியூசி சார்பில்பெருமாள், எச்எம்எஸ் சார்பில் முத்துசாமி, எம்எல்எஃப் சார்பில் பாண்டியராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com