
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இருவர் தாக்கப்பட்டு, அவர்களின் இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு 24 மணி நேர இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
இச்சம்பவம் புதன்கிழமை இரவு பில்வாராவின் சங்கனேர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து பில்வாரா மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இருவர் உணவு அருந்திக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். பின்னர் அவர்களது இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.
விசாரணைகள் தொடங்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்றும், அப்பகுதியில் அமைதி காக்க வேண்டும் என்றும் பில்வாரா மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க சங்கனேர் பகுதியில் 33 காவல் நிலையங்களில் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈத் மற்றும் பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு ஜோத்பூர் மாவட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து, ஜோத்பூரில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.