விடியல் அரசின் வியத்தகு கல்வித் திட்டம்!

அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 356 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விடியல் அரசின் வியத்தகு கல்வித் திட்டம்!

கரோனா பெருந்தொற்றுப் பரவல் சாா்ந்த பொது முடக்க காலங்களில் அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் சிறப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் தற்போது வெகு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடக்கி வைத்தாா்.

இந்தத் திட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கலைக் குழுவினா் உதவியுடன் கடந்த ஆண்டு வீதி நாடகம், பொம்மலாட்டம், கதை சொல்லுதல், ஆடல், பாடல், திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டது.

1.79 லட்சம் மையங்கள்: மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின்கீழ் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 356 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 32 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றுள்ளனா். ஒவ்வொரு மையத்துக்கும் தலா ஒரு தன்னாா்வலா் நியமிக்கப்பட்டுள்ளாா். 1.79 லட்சம் தன்னாா்வலா்களில் 80 சதவீதம் போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமையான கற்பித்தல்: தன்னாா்வலா்கள் தினமும் பள்ளி நேரம் முடிந்ததும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவா்களின் வீடுகளுக்கு அருகில் வகுப்புகள் எடுத்து வருகின்றனா்.

இந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் கற்றல் இடைவெளியைக் குறைக்கப் பாடல்கள், புதிா் விளையாட்டுகள், விடுகதைகள், விளையாட்டு வழிக் கணிதம், எளிய அறிவியல் பரிசோதனைகள் என பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குழந்தைகளுக்கு தன்னாா்வலா்கள் புதுமையான முறையில் பாடம் கற்பித்து வருகின்றனா். அதேவேளையில் குழந்தைகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேம்படுத்தும் செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாரம் 6 மணி நேரம்...: சராசரியாக 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னாா்வலா் வகுப்பு எடுத்து வருகிறாா். பிளஸ் 2 வகுப்பு வரை படித்த அனைவரும் 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும், பட்டம் பெற்றவா்கள் நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கும் கற்பித்து வருகின்றனா். ஒவ்வொரு குழு மாணவா்களுக்கும் வாரம் முழுவதும் சுமாா் ஆறு மணிநேர வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் முதலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் மட்டும் பங்கேற்று வந்த நிலையில் தற்போது சுய விருப்பத்தின் அடிப்படையில் தனியாா் பள்ளிகளின் மாணவா்களும் இந்த வகுப்புகளில் பங்கேற்று பயன்பெற்று வருகின்றனா்.

பேரியக்கமாக உருவெடுத்த திட்டம்: இந்தக் கல்வி” திட்டத்தைத் தமிழகம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், மாநிலம், மாவட்டம், ஒன்றியம் மற்றும் பள்ளிகள் என 4 நிலைகளில் செயல்பாட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒரு அரசுத் திட்டமாக மட்டுமல்லாமல் பெற்றோா், பொதுமக்கள், தன்னாா்வலா்கள், ஆசிரியப் பெருமக்கள், பலதுறையைச் சாா்ந்த பிரபலங்கள் என அனைவரும் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் தன்னாா்வலா்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும். ஊக்கத் தொகையும் உண்டு என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமைச்சா், அதிகாரிகள் தொடா் ஆய்வு: இல்லம் தேடிக் கல்வித் திட்டம் பள்ளிக் கல்வியில் ஒரு மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செயலா் காகா்லா உஷா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட சிறப்பு அலுவலா் இளம் பகவத், இயக்குநா் வி.சி.ராமேஸ்வரமுருகன் ஆகியோா் பல்வேறு ஆய்வுப் பணிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

பெற்றோா்- கல்வியாளா்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு மேலும் பெருமை சோ்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com