மணப்பாறை அருகே 25 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடித் திருவிழா: கொத்து கொத்தாக மீன்களை அள்ளிச் சென்றனர்

மணப்பாறை அருகே 25 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சில நிமிடங்களில் மீன்களைப் பிடித்துச் சென்றனா்
மணப்பாறை அருகே 25 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடித் திருவிழா
மணப்பாறை அருகே 25 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடித் திருவிழா

மணப்பாறை அருகே 25 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சில நிமிடங்களில் மீன்களைப் பிடித்துச் சென்றனா்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னுசிங்கம்பட்டியில் உள்ள சீகம்பட்டி பெரியகுளத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் குளம் முழுவதுமாக நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும் அந்த குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்று வந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக போதிய மழையின்றி குளம் நிரம்பாததால் மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை. 

ஆனால் இந்த ஆண்டு போதிய நீர் நிரம்பி இருந்ததால் குளத்தின் மூலம் பாசன வசதிபெறும் ஆயக்கட்டு தாரர்கள் ரூ 11 ஆயிரத்திற்கு விரால், கட்லா போன்ற மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட்டனர். தற்போது மீன்கள் இனப்பெருக்கம் ஆகி  குளத்தில் அதிக அளவிலான மீன்கள் இருந்த நிலையில் தண்ணீர் குறைந்து விட்டதால் இன்று மீன்பிடித் திருவிழா அதிகாலை 6 மணிக்கு தொடங்கியது. 

சீகம்பட்டி, ராயம்பட்டி, பொன்றுசிங்கம்பட்டி ஆகிய மூன்று ஊர் நாட்டாண்மைகள் கரையில் நின்று வெள்ளை நிறத்துண்டை தலைக்கு மேல் சுழற்றி திருவிழாவைத் தொடக்கிவைத்தனா். தொடா்ந்து, கரையில் காத்திருந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த மீன்பிடி சாதனங்களுடன் குளத்தில் குளத்தில் இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர். 15 நிமிடங்களில் குளத்தில் இருந்த மொத்த மீன்களையும் கொத்து கொத்தாக அள்ளிச் சென்றனர். 

இதில் கட்லா, விரால், குரவை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றனர். 

இந்த திருவிழாவில் சீகம்பட்டி, ராயம்பட்டி, பொன்னுசிங்கம்பட்டி, சங்கிப்பட்டி, பொன்முச்சந்தி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

25 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த மீன்பிடி திருவிழாவில் அதிக அளவிலான மீன்கள் சிக்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com