இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் பொன்முடி

இருமொழிக் கொள்கையே தமிழ்நாடு அரசின் கொள்கை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இருமொழிக் கொள்கையே தமிழக அரசின் கொள்கை: அமைச்சர் பொன்முடி
Published on
Updated on
2 min read

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்று  வருகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் 1,687 முனைவர் பட்ட மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களுக்கு பட்டங்களும், தங்க பதக்கங்களும் நேரடியாக வழங்கப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பட்டங்களை மாணவர்களுக்கு வழங்குகின்றனர். இது தவிர 1,50,424 இளநிலை பட்டங்கள்,1504 எம்.பில் பட்டங்கள், 48,034 முதுநிலை பட்டங்கள் என மொத்தம் 2,04,362 மாணவர்களுக்கான பட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளன.

இந்த விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, மாணவர்கள் அவர்கள் இருக்கும் துறையில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத் நான் முதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்துகிறார். இங்கு பட்டம், பதக்கம் பெறுபவர்களில் பெண்களே அதிகளவில் இருக்கின்றனர். பெண்கள் படிக்கவே கூடாது என்று சொன்ன காலம் உண்டு. இன்று பெண்களை படிக்க வைக்கின்றார்கள். இதுதான் திராவிட மாடல். இதுதான் பெரியார் மண்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று  பாரதியாரின் வரிகளை ஆளுநர் அடிக்கடி மேற்கோள் காட்டுவார். கல்வித்துறைக்கு தமிழக முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றார்.


கல்வி, தொழில் துறை, தொழிலாளர் நலத்துறை இணைந்து, மாணவர்கள் படிக்கும் போதே தொழில் அனுபவங்களை பெற  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் பிற மொழிகளுக்கு எதிரானவர்கள் இல்லை. ஹிந்திக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஹிந்தியை திணிக்க வேண்டாம் என்று கூறுகிறோம். இதையே இங்குள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழர்கள் எந்த மொழியையும் கற்க தயாராக இருக்கிறோம். ஆனால் அது மூன்றாவது மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். ஏனெனில் சர்வதேச மொழியான ஆங்கிலமும் , தாய் மொழியான தமிழ் மொழியும் இங்கு இருக்கின்றது.

ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர். அதை நாம் கண்டிருக்கிறோம். எனவே ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பதை நம்பத் தேவையில்லை.
புதிய கல்வியில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்றத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு என ஒரு கல்விக்கொள்கை உள்ளது. மாநில  கல்விக் கொள்கையை வகுக்க ஒரு குழுவை அமைத்திருக்கிறோம். நாங்கள் எங்களின் உணர்வுகளை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.

ஹிந்தி என்பது தேர்வு மொழியாக  மட்டுமே  இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை உயர்த்தப்பட வேண்டும் என்பதற்கு பல திட்டங்களை இந்த அரசு  செயல்படுத்துகிறது.

பட்டம் பெற்ற மாணவர்கள் வேலை தேடுவதை விட, வேலை தருபவர்களாக வருவதுதான் உண்மையான வளர்ச்சி. மொழி விவகாரத்தில் எங்கள் உணர்வுகளையும், எங்கள் மாணவர்களின் பிரச்னையையும் உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும் என்றார் பொன்முடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com