என்ன, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்புக்கு மழை காரணமா?

திடீரென ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.
என்ன, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்புக்கு மழை காரணமா?
என்ன, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்புக்கு மழை காரணமா?

திருப்பத்தூா்: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லையெனில் இலவசமாக தருவோம் என்று விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சிகள் நேற்று அறிவித்திருந்த நிலையில், திடீரென ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் மே 13-ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரியாணி திருவிழா, ஆம்பூா் வா்த்தக மையத்தில் நடைபெற இருந்தது.

இங்கு 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 20-க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் மாட்டிறைச்சி பிரியாணி வகைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், பீப் பிரியாணி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விசிக, மமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

மேலும், திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை விற்பனை செய்ய அனுமதி வழங்கவில்லை என்றால், வர்த்தக மைய வளாகத்திற்கு வெளியே வைத்து இலவசமாக மாட்டிறைச்சி பிரியாணி விநியோகிப்போம் என்று விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சிகள் அறிவித்தன. 

இந்த நிலையில், ஆம்பூரில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் நடைபெற இருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவித்தார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பு:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சாா்பில், திருப்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மே 13, 14 ஆகிய இரு நாள்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற இருந்த ஆம்பூா் பிரியாணி திருவிழா-2022 பொதுமக்கள் பங்குபெற ஏதுவாக அமையாது. எனவே, பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை அறிவிப்பு காரணமாக, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது பிரியாணி உணவக உரிமையாளர்களுக்கும், பிரியாணி பிரியர்களுக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com