'சிலையாக நின்று'.. திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

சென்னையில் நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவினை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
'சிலையாக நின்று'.. திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு

சென்னையில் நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவினை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், உங்களில் ஒருவன் எழுதும் வரவேற்பு மடல் என்று ஸ்டாலின் குறிப்பிட்டு கூறியிருப்பதாவது,

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் திருவுருவச் சிலை திறக்கப்படும் நாள் (மே 28), நம் அனைவருக்கும் தித்திப்பான நாள்! திசையெல்லாம் மகிழ்ச்சி பரவிடும் நாள்! ‘உடன்பிறப்பே..’ என்று தமது காந்தக் குரலால் அவர் நம்மை பாசத்துடன் அழைப்பது போன்ற உணர்வைப் பெறுகின்ற திருநாள்!

தனது கை உயர்த்தி, ஐந்து விரல்களைக் காட்டி மக்களின் செல்வாக்கைப் பெற்ற நம் உயிர்நிகர்த் தலைவரை, தமிழ்நாட்டு மக்கள் ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தனர். தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள் முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையும் நம் ஆருயிர்த் தலைவருக்கேயுரியது.

ஐந்தாவது முறை அவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, சென்னை அண்ணா சாலையில், எந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை எழிலுடனும் வலிவுடனும் அமைத்தாரோ, அந்த ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலேயே அவருடைய திருவுருவச் சிலையை, தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையில், கட்சியின் பொதுச்செயலாளரும்  நீர்வளத்துறை அமைச்சருமான அண்ணன் துரைமுருகன்  வரவேற்புரையாற்றிட, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு, கருணாநிதியின் உருவச் சிலையினை மே 28 சனிக்கிழமை அன்று மாலை 5.30 மணி அளவில் திறந்து வைத்திட இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

அண்ணா சாலையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருணாநிதியின் உருவுருவச் சிலை நிறுவப்படுகிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து எவராலும் அகற்ற முடியாத தனிப்பெரும் சாதனையாளர் - தளராத உழைப்பாளி - சமரசமில்லாத சமூகநீதிப் போராளி நம் உயிர் நிகர் தலைவர் அவர்களின் திருவுருவச் சிலை திறக்கும் நிகழ்வு, சென்னையில் மகத்தான விழாவாக நடைபெறுகிறது. தலைநகராம் சென்னையையும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளையும் நவீன காலத்திற்கேற்ப வடிவமைத்த 'கலைஞர்' அவர்தானே!

அவர் சிலையாக மட்டுமல்ல, நம் நெஞ்சில் நிலையாக வீற்றிருந்து கொள்கை முழக்கம் செய்து கொண்டே இருக்கிறார். இயற்கை அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டாலும், நம் இதயத்துடிப்பினில் அவரே நிறைந்திருக்கிறார். எந்நாளும் வழிநடத்துகிறார். மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு என்பது அவர் நமக்கு வகுத்துத் தந்த ஆட்சிக்கான இலக்கணம்.

அந்த இலக்கணத்தின்படி, இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்னோடியான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி, சரித்திரத்தில் தனக்கான இடத்தினை கடைசி வரை போராட்டம் வழியாகவே பெற்ற மாபெரும் தலைவருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் உருவச் சிலை திறக்கப்படுவதை எண்ணி, உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்! முதலமைச்சர் என்ற முறையில் விழாவை சிறப்பித்துத் தர வேண்டும் என உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் என்று திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com