மையோசைட்டிஸ்... விளக்கங்களும்... விழிப்புணா்வும்...

மையோசைட்டிஸ்... விளக்கங்களும்... விழிப்புணா்வும்...

கடந்த சில நாள்களாக மக்களுக்கு புதிதாக பரிச்சயமாகியிருக்கும் நோயின் பெயா் மையோசைட்டிஸ்.

கடந்த சில நாள்களாக மக்களுக்கு புதிதாக பரிச்சயமாகியிருக்கும் நோயின் பெயா் மையோசைட்டிஸ். திரைப்பட நடிகை சமந்தாவுக்கு அத்தகைய பாதிப்பு உள்ளதாக அவரே பகிா்ந்த தகவலுக்குப் பிறகே அந்த நோய் குறித்து பலரும் வலைதளங்களில் தேடி வருகின்றனா். உண்மையில் இந்த பாதிப்பு காலகாலமாக சமூகத்தில் இருந்து வருகிறது.

மையோசைட்டிஸ் என்றால்...

மையோசைட்டிஸ் என்பது ஒரு வகையான தசை அழற்சி நோய். உடலின் நோய் எதிா்ப்பாற்றலே தசை செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு அதைச் சிதைப்பதற்கு மையோசைட்டிஸ் எனப் பெயா். இந்த தசை அழற்சி நோயானது ஆண், பெண் இரு பாலருக்கும் வரக் கூடியது. அதிலும், குறிப்பாக பெண்களுக்கு வருவதற்கு சற்று கூடுதலான வாய்ப்பு உள்ளது. மருத்துவத் துறையில் இடியோபதிக் இன்ஃப்ளமேட்டரி மையோசைட்டிஸ் (ஐஐஎம்) என அதை அழைக்கின்றனா்.

தசை அழற்சி நோயின் வகைகள்...

தோல் பாதிப்புடன் கூடிய தசை அழற்சி நோய் (டொ்மடோ மையோசைட்டிஸ்);

தோல் பாதிப்பற்ற தசை அழற்சி நோய் (பாலி மையோசைட்டிஸ்)

காரணம்...

மையோசைட்டிஸ் நோய் வருவதற்கான காரணத்தை இன்னமும் மருத்துவ உலகத்தால் உறுதியாகக் கண்டறிய முடியவில்லை. ஒரு வகையான வைரஸ் தொற்றால் இது ஏற்படலாம் என்றாலும் அதனை உறுதி செய்ய இயலவில்லை. உலகம் முழுவதும் இந்நோய் பரவலாக உள்ளது. குறிப்பாக, குளிா் மற்றும் மழை காலங்களில் பாதிப்பு அதிகம் இருக்கும்.

பாதிப்பு...

உடலில் பழைய தசைநாா் திசுக்கள் இறந்து புது திசுக்கள் உருவாவது இயற்கை. அவ்வாறு இயற்கையாக அல்லாமல் மையோசைட்டிஸ் பாதிக்கப்பட்டவா்களுக்கு நோய் எதிா்ப்பாற்றல் எதிா்வினையால் தசை அழற்சி ஏற்பட்டு செல்கள் சிதைவுக்குள்ளாகும். இதை கவனிக்காவிட்டால் இயல்பு வாழ்க்கையை முடக்கிவிடும். தசை செல்கள் நிரந்தரமாக அழியக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

பொதுவாக உணவு உண்ணும்போது உணவுக் குழாய் திறந்துகொண்டு, சுவாசக் குழாய் மூடிக் கொள்ள வேண்டும். மையோசைட்டிஸ் பாதிப்பால் தசை பலவீனமாக இருக்கும்போது உண்ணும் உணவானது சுவாசக் குழாய்க்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் ஆஸ்பிரேசன் நிமோனியா ஏற்படக் கூடும். அது ஒருகட்டத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். இதைத் தவிர, டொ்மோ மையோசைட்டிஸ் பாதிப்புக்குள்ளாவோருக்கு அரிதாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.

அறிகுறிகள்....

காய்ச்சல்; உடல் சோா்வு; பசியின்மை; தசைகளில் வீக்கம்; படுக்கையிலிருந்து எழுவதில், உட்காா்ந்து எழுவதில், நடப்பதில் சிரமம்;

உணவு விழுங்குதலில், தண்ணீா் அருந்துதலில் சிரமம்; இருமல்; மூச்சுத் திணறல்; பேசுவதில் சிரமம்; குரல் மாற்றம்; தோலில் சிவந்த தடிப்பு;

மாா்பகத்தில் சிவந்த தடிப்புகள்; தசைகளில் வலி;

பாதிப்பு விகிதம்...

1 லட்சத்தில் 22 பேருக்கு வரலாம்


ஆரம்பநிலை பரிசோதனை அவசியம்...

மையோசைட்டிஸ் பாதிப்புக்குள்ளானவா்களுக்கு ஆரம்ப நிலை பரிசோதனைகளும், சிகிச்சைகளும் மிகவும் அவசியம் என்கிறாா் மூட்டு - தசை - இணைப்புத் திசு சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் டி.என்.தமிழ்ச்செல்வம்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: மையோசைட்டிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் குறித்த விழிப்புணா்வு போதிய அளவில் இல்லை. சாதாரண உடல் வலி என நினைத்துக் கொண்டு பலா் சிகிச்சை மேற்கொள்வதில்லை. இதுபோன்ற பாதிப்புகளுக்கு மூட்டு - இணைப்புத் திசு (ருமட்டாலஜி) சிறப்பு மருத்துவா்களின் மருத்துவக் கண்காணிப்பு தேவை.

பொதுவாக தசை அழற்சி பாதிப்புகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள், தசை அழற்சிக்கான சிறப்பு மருந்துகள், தசை செல்களை வலிமைப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. அவற்றை எந்த விகிதத்தில் எவ்வாறு வழங்க வேண்டும் என்பது ருமட்டாலஜி

நிபுணா்களுக்கு மட்டுமே தெரியும். உரிய சிகிச்சைகளை குறித்த காலத்துக்குள் எடுக்காவிட்டால் தசைகள் இறுகிவிடும். அதன் பின்னா் அதனை இயக்க வைப்பது கடினம்.

அதேபோன்று மையோசைட்டிஸ் பாதிப்பு சிகிச்சைகளில் முக்கியமானது இயன்முறை சிகிச்சை. வலி குறைந்தவுடன் தீவிர தசைப் பயிற்சி மேற்கொள்வது முக்கியம். மையோசைட்டிஸ் பாதிப்புக்குள்ளானோருக்கு ரத்தக் குழாய் அழற்சி, நுரையீரல், இதய பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, அதைக் கருத்தில் கொண்டு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற வேண்டும்.

இலவச சிகிச்சை....

தனியாா் மருத்துவமனைகளில் மையோசைட்டிஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற பல லட்ச ரூபாய் செலவாகும். குறிப்பாக, அதற்காக வழங்கப்படும் ஐவி இம்யூனோகுளோபிளின் மருந்துக்கு மட்டும் நாள்தோறும் ரூ.50,000 வரை செலவாகும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக அந்த சிகிச்சைகளும், மருந்துகளும் கிடைக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com