உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல: முத்தரசன்

10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பழங்குடி, பட்டியல் இன இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை பறிக்க வழி வகுக்கும்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பழங்குடி, பட்டியல் இன இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை பறிக்க வழி வகுக்கும். சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 

பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான (இ.டபிள்யு.எஸ்) 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்த தீர்ப்பு குறித்து முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத்தின் 103 ஆவது அரசியல் திருத்த சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சட்ட அமர்வு  தீர்ப்பளித்து உள்ளது.

இதில் இரண்டு நீதிபதிகள் 103-ஆவது அரசியல் திருத்த சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளனர். இது சரியல்ல. இது அதிர்ச்சி அளிக்கிறது.

அரசியல் அமைப்பு சட்டம் இது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினருக்கு நீதி வழங்க வழிவகை செய்துள்ளது. ஆனால், மத்திய அரசின் சட்டத் திருத்தம் பொருளாதார அடிப்படையை மட்டும் அளவுகோளாக கொண்டதும், அது உயர் சாதி பிரிவினருக்கு மட்டுமானதும் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வில்லை.

பொருளாதார அடிப்படையில் மட்டுமே உலகில் எந்த நாட்டிலும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. பொருளாதாரம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல என்பதே இதற்கு முக்கியக் காரணம். எனவே, நீதிபதிகளின் இக்கருத்து ஏற்புடையதல்ல. 

இட ஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. இவை பழங்குடி, பட்டியல் இன இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை பறிக்க வழி வகுக்கும்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடே 2006க்குப் பிறகுதான் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறைக்கு வந்தது.

அதுவும் கிரிமிலேயர் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் முழுமையாக பயனை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கிட வில்லை. அதைப்போலவே, மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு சென்ற ஆண்டு தான் நடைமுறைக்கு வந்துள்ளது. 

அதுவும் சரியாக நடைமுறைபடுத்தப்படவில்லை. இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத காலகட்டத்தில், இட ஒதுக்கீடு நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பது மிகவும் வருந்துத்தக்கது.

எனவே சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான இந்த தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என முத்தரசன் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com