பள்ளிக்கரணை புதிய வடிகால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு:  அன்புமணி ராமதாஸ்

சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் புதிய வடிகால் அமைக்கும் பணிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
பள்ளிக்கரணை புதிய வடிகால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு:  அன்புமணி ராமதாஸ்
Published on
Updated on
2 min read



சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் புதிய வடிகால் அமைக்கும் பணிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பெரும்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ள நீர் தேங்குவதை தவிர்க்க, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் புதிய வடிகால் அமைக்கும் பணியை நீர்வளத்துறை தொடங்கி உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தன்மையையே மாற்றி விடக் கூடிய இந்தத் திட்டத்தை சுற்றுச்சூழல் வல்லுனர்களுடன் கலந்தாய்வு செய்யாமல் செயல்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலம் சென்னைக்கு இயற்கை கொடுத்த கொடையாகும். மழை நிறைந்த காலத்தில் அதிக நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு, கோடை காலத்தில் சீராக வெளிவிடும் திறன் இதற்கு உண்டு. அதுமட்டுமின்றி 350-க்கும் கூடுதலான உயிரினங்களுக்கும், 200-க்கும் கூடுதலான தாவரங்களுக்கும் வாழ்க்கையளிக்கும் பல்லுயிர் வாழ்விடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் திகழ்கிறது. சதுப்பு நிலத்தின் சிறப்புத் தன்மைகளை சிதைக்கும் வகையில், அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் அது சூழலியலுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

சதுப்பு நிலத்தில் புதிய கால்வாய் அமைக்கப்படவில்லை; அங்கு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து தூர்ந்து போன கால்வாயைத் தான் தூர் வாரி, அதன் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வரும் கூடுதல் நீரை பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காடு பகுதியில் வங்கக் கடலில் கலக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அண்மைக்காலங்களில் அப்பகுதியில் எந்த கால்வாயும் இல்லை. இப்போது புதிய கால்வாயைத் தோண்டினாலும், இருந்த கால்வாயை தூர் வாரினாலும் அது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தன்மையை மாற்றி விடும் என்பது உண்மை. அதனால், சதுப்பு நிலத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள் அதற்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கால்வாய் அமைத்தாலோ, ஆழப்படுத்தினாலோ, அதன் தண்ணீரைத் தேக்கி வைக்கும் திறன் பறி போய்விடும். அதனால் மழைக்காலத்தில் வரும் தண்ணீர் முழுவதும் உடனடியாக வடிந்து விடும். அதனால் கோடைக்காலத்தில் தண்ணீர் வளம் இருக்காது. இது பல்லுயிர் வாழும் சூழலை கெடுத்து விடும். சோவியத் ஒன்றியத்தில் இருந்த உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றான ஏரல் ஏரி, இதே போன்ற சீரழிவுகளால் தான் அதன் நீர்வளத்தை இழந்து பாலைவனமாக மாறி வருகிறது. அதேபோன்ற சூழல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும் ஏற்படுவதற்கு தமிழக அரசு இடம் தரக்கூடாது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கடல் மட்டத்தை விட கீழாக இருக்கிறது. அதில் கால்வாய் அமைத்தாலோ, தூர் வாரினாலோ அதன் மட்டம் மேலும் குறைந்து விடும். அதனால் கடல் நீர் சதுப்பு நிலத்திற்குள் நுழைந்து விடும் ஆபத்து உள்ளது. அவ்வாறு கடல் நீர் உள்ளே நுழைந்தால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அதற்குரிய தனித்துவமான சூழலியல் தன்மைகள் அனைத்தையும் இழந்து விடும் ஆபத்து உள்ளது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் 2020 ஆம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாக தூர் வாரி ஆழப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. இது குறித்த விவரங்கள் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அவ்வாறு தெரிந்திருந்தும் சதுப்பு நிலத்தின் குணங்களை அழிக்கும் வகையிலான திட்டத்திற்கு எவ்வாறு அனுமதி கொடுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை.

அண்மையில் தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சர் உடன்படிக்கையின்படி உலக முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக 1,725 ஏக்கராக சுருங்கி விட்டது. இழந்த நிலங்களை மீட்டெடுத்தல், அதன் பல்லுயிர் வாழும் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் ஈர நிலங்கள் பட்டியலில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சேர்க்கப்பட்டதற்கான நியாயயங்களை வகுப்படுத்த வேண்டும். மாறாக, அதை சீரழிப்பதன் மூலம் வளமையும், செழுமையும்கொண்ட பள்ளிக்கரணை ஈர நிலத்தை காய்ந்த நிலமாகவோ, பாலைவனமாகவோ மாற்றிவிடக்கூடாது.

எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த ஆணையிட வேண்டும். அதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இழந்த பரப்பை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com