காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குள்பட்ட வெங்கச்சேரி செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தற்காலிக பாலத்தில் கனரக வாகனங்களாகிய பேருந்து, லாரி மற்றும் கார் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் தொடர் கன மழை பெய்து வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 161 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து உத்திரமேரூர் ஒன்றியத்திற்குள்பட்ட வெங்கச்சேரி காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட மாகறலை இணைக்கும் செய்யாற்று பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக பாலம் சேதம் அடைந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தற்காலிக பாலத்தில் கனரக வாகனங்களாகிய பேருந்து, லாரி மற்றும் கார் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்பவர்கள் மாகறலில் இறங்கி பாலத்தை நடந்து சென்று வெங்கச்சேரிலும் அதேபோல் உத்திரமேரூர் இருந்து காஞ்சிபுரம் செல்பவர்கள் வெங்கச்சேரியில் இறங்கி பாலத்தைக் கடந்து மாகறல் சென்று மாற்று பேருந்து செல்வதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.