முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதி அரிட்டாபட்டி: தமிழக அரசு அறிவிப்பு!

மதுரையில் உள்ள அரிட்டாபட்டி பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அரிட்டாபட்டி
அரிட்டாபட்டி
Published on
Updated on
2 min read

மதுரையில் உள்ள அரிட்டாபட்டி பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக தமிழ்நாடு அரசு கடந்த 2020 டிசம்பரில் அறிவித்தது. 

இந்நிலையில், உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாக அறிவித்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

அரிட்டாபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று பாரம்பரியம் உள்ளதாகவும் அரிய பறவை இனங்கள், பூச்சிகள், விலங்கினங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் இங்குள்ள பழமையான பாறைகள், குடைவரை சிவன் கோயில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் படுகைகள் உள்ளிட்டவை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

இன்று (22.11.2022), தமிழ் நாடு அரசு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக உயிரிய பன்முகச் சட்டம் 2002ன் கீழ் அறிவித்துள்ளது.  இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.

பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது.

அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக செயல்படுகிறது.

72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளது. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது, அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன, இதில் லகர் இராசாளி, ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப் பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்பு திண்ணிகள் (Manis crassicaudata), மலைப்பாம்பு (Python molurus) மற்றும் அரிய வகை தேவாங்கு (Loris spp) ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

மேலும் இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன.  இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது.

அரிட்டாபட்டியை பல்லுயிர்ப் பாரம்பரியத் தலமாக அறிவிப்பதற்கான முடிவு கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் போன்ற பல துறைகளின் ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும். இந்த அறிவிக்கை, இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்கவும் இது உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com