ஆதார் இணைப்பு - மின்துறை அமைச்சர் சொல்வதென்ன ?

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பவர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி
ஆதார் இணைப்பு - மின்துறை அமைச்சர் சொல்வதென்ன ?
Published on
Updated on
2 min read

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பவர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற் கொண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது தமிழகத்தில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலங்களிலும் வருகின்ற 28.11.2022 திங்கட்கிழமை முதல் 31.12.2022 வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளது. 
பண்டிகை தினங்கள் தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும். பொதுமக்கள் இந்த தருணத்தினை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு முகாம்கள் மூலம் தங்களது மின் இணைப்பு எண்ணிணை ஆதாருடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 31.12.2022 வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமும் இன்றி ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி செலுத்தலாம். அதற்கு எவ்வித இடையூறும் இல்லை என்று மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்கள் தமது பத்திரிக்கை செய்தி குறிப்பில் தெரிவித்தார். 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது ஏற்கனவே பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு மின் நுகர்வோர்களின் தொலைபேசி எண்களை மின் இணைப்புடன் இணைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளை பெற்றிருக்கும் மின் நுகர்வோர்கள் பற்றிய விவரங்களை புதுப்பிக்கும் பொருட்டு அவர்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. 

இவ்வாறு ஆதாரை இணைக்கும் பொழுது தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் கிடைக்கப் பெறுவதோடு, ஏற்கனவே பெயர் மாற்றம் செய்யப்படாமல் இறந்து போன/பழைய மின் இணைப்பு உரிமைதாரர்களின் பெயர்களில் இருக்கும் மின் இணைப்புகளை தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்களுக்கு தகுந்த ஆவணங்களின்படி பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. இதனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு மின் இணைப்பு உரிமையாளர்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் கிடைக்கப்பெறும். 
மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதினால் வீடுகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அதேபோன்று, கைத்தறி மற்றும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்படும். ஆதாரை இணைப்பதினால் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com