குஜராத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக, பொது சிவில் சட்டம் உறுதி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆளும் பாஜக அரசு இன்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ளது.
குஜராத் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக, பொது சிவில் சட்டம் உறுதி

​குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆளும் பாஜக அரசு இன்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நிலவி வந்த இருமுனைப் போட்டி இந்த முறை ஆம் ஆத்மியின் வரவால் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

இந்த நிலையில், குஜராத்தில் ஆளும் பாஜக தங்களது தேர்தல் அறிக்கையை இன்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ளது.இந்தத் தேர்தல் அறிக்கையை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கட்சி தலைமை அலுவலகத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டில் முன்னிலையில் வெளியிட்டார். இந்தத் தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது மற்றும் தீவிரவாத செயல்பாடுகளை கண்டறிய புதிய அமைப்பு ஏற்படுத்துவது போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பாஜக வெளியிட்டுள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் மேலும் இடம்பெற்றுள்ளதாவது:

20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் காப்பீட்டுத் தொகையினை இரட்டிப்பாக்குவது. தற்போது ஒரு குடும்பத்திற்கு மருத்துவ செலவுக்காக வழங்கப்பட்டு வரும் ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் முதுநிலைப் பட்டம் பெறும் வரை இலவச கல்வி வழங்கப்படும்.

பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பாக சட்டம் இயற்றப்படும். இந்த சட்டத்தின் மூலம் மாநிலத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தெற்கு குஜராத் மற்றும் சௌராஷ்டிரா பகுதியில் இரண்டு கடல் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்.

ஆரம்ப சுகாதார மையங்களில் இலவச உடல் பரிசோதனை. எய்ம்ஸ் தரத்திலான இரண்டு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

20 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு உலகத் தரத்திலான கல்வி வழங்கப்படும்.

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் போல குஜராத் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உருவாக்கப்படும்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெ.பி.நட்டா பேசியதாவது: மாநில குழுவின் பரிந்துரையின்படி குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். மாநிலத்தில் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய தீவிரவாத தடுப்பு அமைப்பு உருவாக்கப்படும். பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. விவசாயிகளுக்கான சேமிப்புக் கிடங்குகள், விற்பனை மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. நீர்ப்பாசனத்தை வலிமைப்படுத்துவதற்காக ரூ.25 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது என்றார்.

இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com