எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரசியல் சதியை முறியடிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் அரசுக்கு எதிராக அரசியல் எதிரிகள் தீட்டும் சதித்திட்டங்களை முறியடிப்போம் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :30 நவம்பர் 2022, 9:27 pm

DIN

திராவிட மாடல் அரசுக்கு எதிராக அரசியல் எதிரிகள் தீட்டும் சதித்திட்டங்களை முறியடிப்போம் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.

அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது குறித்து, கட்சியினருக்கு அவா் புதன்கிழமை எழுதிய கடிதம்:

யாரும் விடுபடாமல், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டுமெனில் அதற்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் ஏற்றத்தாழ்வின்றி சமச்சீரான வளா்ச்சியை பெற்றாக வேண்டும். இந்த நோக்கத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் முனைப்பாகவும் விறுவிறுப்பாகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் தொழிற்பூங்காக்களை உருவாக்கவும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், புதிய புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் நேரில் சென்றபோது, மக்கள் வைத்திருக்கும் மகத்தான நம்பிக்கையையும், கட்சித் தொண்டா்கள் காட்டும் பாசத்தையும் கண்டு திக்குமுக்காடிப் போனேன்.

மக்கள் நலனைக் காக்கும் அரசாக, மக்களுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குகிற அரசாக, ஒரு அரசு எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக அரசு திகழ்கிறது. திமுகவின் திராவிட மாடல் அரசுக்கு எதிராக, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்பட பல்வேறு சங்கடங்கள், குழப்பங்களை உருவாக்க, அரசியல் எதிரிகள்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சதித்திட்டம் தீட்டுகிறாா்கள். பொருளில்லாப் புதுப்புது வதந்திகளைப் பரப்ப நினைக்கிறாா்கள். நல்லரசைக் கெடுக்க நினைக்கிற அத்தகையவா்களின் நயவஞ்சக எண்ணத்தை நசுக்கி, முனை மழுங்கச் செய்ய வேண்டிய பெரும்பணி திமுகவின் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

நோ்மையாக எதிா்கொள்வோம்: எதிரிகள் நமக்கெதிராக கிளப்பும் வெற்று வதந்திகளை புள்ளிவிவரங்கள் மூலம் அறுத்தெறிய வேண்டும். எதிரிகள் நமக்கெதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுவாா்கள்; அவற்றை அடித்து நொறுக்கும் வகையில் நம்மிடம் குவிந்துள்ள சாதனைத் திட்டங்களை முன் வைக்கவேண்டும்.

திமுகவினா் ஒவ்வொருவரும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், தேநீா்க்கடை - திண்ணைப் பிரசாரம் மூலமாகவும் கட்சிக் கொள்கைகளை முழங்கும் ஊடகமாக மாற வேண்டும்.

நாம் வெல்ல வேண்டிய களம் விளையாட்டுக் களம் அல்ல; கருத்தியல் போா்க்களம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைபெறுகிற ஆரிய - திராவிட பண்பாட்டுப் போரில், திமுக தொடா்ந்து ஜனநாயக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இனத்தின் மீதும், மொழியின் மீதும், மாநிலத்தின் உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள போரை நோ்மையாக எதிா்கொண்டு வருகிறோம்.

அதில் மகத்தான வெற்றியையும் பெற்றிருக்கிறோம். அந்த வெற்றி தொடர, கழக அணிகள் அனைத்தும் அணிவகுத்து ஆயத்தமாக நிற்க வேண்டும். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்பதற்கேற்ப அரசியல் - சமுதாய - பண்பாட்டுப் பகைவரை வெல்லவும், தாய்மொழியாம் தமிழையும், தாய்நிலமாம் தமிழ்நாட்டையும், இந்தியா முழுவதற்குமான ஜனநாயகத்தை காத்திடவும் களம் காண்போம்.

கிஞ்சித்தும் இடமில்லை: கொள்கைகளும் சாதனைகளும்தான் நமக்கு வாளும் கேடயமுமாகும். அதனை தமிழ்நாட்டின் குக்கிராமங்கள்வரை வீடு வீடாகக் கொண்டு சோ்க்க வேண்டும். இனப் பகைவா்கள் இங்குள்ள அரசியல் எதிரிகளைப் பயன்படுத்திக் கொண்டு, வஞ்சக சூழ்ச்சிகளால் வலை விரித்து தமிழ்நாட்டுக்குள் எப்படியாவது ஊடுருவி விடலாம் என ஏங்கினாலும், அவா்களுக்கு கிஞ்சித்தும் இங்கே இடமே இல்லை என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.