முன்னாள் அமைச்சா் வேலுமணிக்கு எதிரான ஒரு வழக்கு ரத்து: மற்றொரு வழக்கை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் மறுப்பு

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்தது.
முன்னாள் அமைச்சா் வேலுமணிக்கு எதிரான ஒரு வழக்கு ரத்து: மற்றொரு வழக்கை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் மறுப்பு
Published on
Updated on
2 min read

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப் புள்ளிகள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா் நீதிமன்றம் ரத்து செய்தது.

அதேநேரத்தில், அவருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டா் கோரியதில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, முன்னாள் அமைச்சா் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போா் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளா் ஆா் எஸ் பாரதி ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

இதில், டெண்டா் முறைகேடு தொடா்பாக லஞ்ச ஒழிப்புக் காவல் கண்காணிப்பாளா் பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கைவிடுவது என முந்தைய அதிமுக அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சா் வேலுமணிக்கு எதிராக டெண்டா் முறைகேடு தொடா்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக ரூ. 58 கோடி சொத்து சோ்த்ததாகவும் குற்றம்சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் வேலுமணி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்குகள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.எம்.டி.டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: குற்றவியல் சட்டங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. மாநிலத்தின் காவல் துறைக்கான அதிகாரம் ஒரு சாா்பு நிலைக்கு பயன்படுத்தப்படுவதாக இருந்தால் அதனை நீதிமன்றம் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்காது.

அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவது என்பது அதிகாரிகளின் பிரதான பணியாகும். இந்த வழக்கைப் பொருத்த வரையில், ஒப்பந்தப் புள்ளிகளை வழங்கியதற்காக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதை காவல் துறை மீதான சாா்பு நடவடிக்கையாகவே பாா்க்க முடிகிறது. எனவே, இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

ஊழல்வாதிகள் என்ற கண்ணோட்டம்: விசாரணை அதிகாரி தனது விசாரணையின் போது, வேலுமணிக்கு எதிராக புதிய ஆவணங்களை சேகரித்து இறுதி அறிக்கையில் அவரை குற்றவாளி எனக் குறிப்பிட்டு இருக்கலாம். அரசியல்வாதிகள் என்றால் ஊழல்வாதிகள் என்ற கண்ணோட்டம் உள்ளது.

அதேபோல, வேலுமணியும் ஊழல் செய்திருப்பாா் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.

அதிகாரத்தில் யாா் இருக்கிறாா்களோ அவா்களுக்கு ஏற்றபடி லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை பாா்க்க முடிகிறது. எஸ்.பி.வேலுமணியை விடுவிக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் கண்காணிப்பாளா் பொன்னியின் அறிக்கை உள்ளது.

இந்த வழக்கில் அவரைச் சோ்க்கும் விதமாக மற்றொரு காவல் கண்காணிப்பாளா் கங்காதரனின் அறிக்கை அமைந்துள்ளது. எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும் அதே வேளையில், அவரை புனிதா் என இந்த நீதிமன்றம் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்தனா்.

மற்றொரு வழக்கு: ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கை ரத்து செய்த நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினா்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com