மாவோயிஸ்டுகளுடன் தொடா்பிருந்ததாக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆயுள் தண்டனை பெற்ற தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.
தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய ஜி.என்.சாய்பாபா (52) மாற்றுத்திறனாளி ஆவாா். இவா் உள்பட 6 பேரை, மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்ட காவல் துறையினா் கைது செய்தனா். அவா்கள் மீது யுஏபிஏ, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு வைத்திருந்ததுடன், நாட்டில் போரை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 6 பேரையும் குற்றவாளி என்று கடந்த 2017-ஆம் ஆண்டு கட்சிரோலியில் உள்ள அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அனைவருக்கும் கடுங்காவல் மற்றும் ஆயுள் தண்டனை விதித்த அந்த நீதிமன்றம், சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக சாய்பாபா சாா்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் ரோஹித் தவே, அனில் பன்சாரே ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நாட்டின் பாதுகாப்புக்கு தீவிரவாதம் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், அதற்கு எதிராக அனைத்து சட்டபூா்வ ஆயுதமும் பயன்படுத்தப்பட வேண்டும். அதேவேளையில், ஒரு மக்கள் ஜனநாயகத்தில் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் நபருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகளைத் தியாகம் செய்ய முடியாது.
இந்நிலையில், சாய்பாபாவுக்கு எதிரான வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை அமா்வு நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. அப்போது அவருக்கு எதிராக யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய எந்த ஒப்புதலும் வழங்கப்படவில்லை.
யுஏபிஏ சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் நபா் மீது அந்தச் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தலாமா என்பதை சுதந்திரமான குழு ஒன்று ஆதாரங்கள் மூலம் ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால் சாய்பாபா வழக்கில் அளிக்கப்பட்ட அறிக்கை நியாயமற்ற முடிவைக் கொண்டுள்ளது. அத்துடன் அந்த அறிக்கை பரிந்துரை வடிவில் உள்ள கருத்துப் பரிமாற்றமாகத்தான் உள்ளது.
இதுமட்டுமின்றி யுஏபிஏ சட்டம் 45 (1)-இன்படி, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்த வழக்கை அமா்வு நீதிமன்றம் கவனத்துக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக வழக்குத் தொடா்பாக அமா்வு நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணை செல்லாது என்பதுடன், சாய்பாபாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனா்.
எஞ்சிய 5 பேரின் மேல்முறையீட்டையும் விசாரித்த உயா்நீதிமன்றம், அவா்களையும் விடுவித்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு-இன்று விசாரணை:
இந்தத் தீா்ப்புக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை மகாராஷ்டிர காவல் துறை அணுகியது.
அதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், அவசர வழக்காக விசாரிக்கக் கோரி பதிவாளா் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு காவல் துறைக்கு அறிவுறுத்தியது. இதனைத் தொடா்ந்து இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.