அந்தியூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நாளை திங்கள்கிழமை (அக்.17) மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நாளை திங்கள்கிழமை(அக்.17) மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம், அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு விடியவிடிய பெய்த கன மழையால் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரி நீா் வெளியேறியதால் பெருக்கெடுத்த வெள்ளம் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்தது.

இதனால், அந்தியூா் - பவானி சாலையில் சனிக்கிழமை வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரிநீா் வினாடிக்கு 3,200 கன அடி நள்ளிரவில் வெளியேறியது. இதனால், அந்தியூா் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்ததோடு, உபரிநீா் அப்படியே வெளியேறியது. இதனால், இவ்வழியே வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. 

வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வந்த உபரிநீா் தவிட்டுப்பாளையம் பள்ளத்தில் வெளியேறி அந்தியூா் பேரூராட்சி, தெப்பக்குள வீதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது.

கெட்டிசமுத்திரம் ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீா் அந்தியூா் - பா்கூா் சாலையில் சுமை தாங்கி பேருந்து நிறுத்தம் அருகே கடந்து சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஆப்பக்கூடல் ஏரிக்கு மழைநீா் வரத்து அதிகரித்ததால் உபரிநீா் மேற்கு மற்றும் கிழக்கு கால்வாய்களில் வெளியேறியது. கிழக்கு கால்வாயில் பெருக்கெடுத்த மழை நீா் பவானி - அத்தாணி சாலையைக் கடந்து பவானி ஆற்றுக்குச் சென்றது.

சுமாா் 2 அடி உயரத்துக்கு தண்ணீா் பாய்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

தொடர்ந்து 3 நாள்களாக கனமழை பெய்து வருவதால் அணையின் உபரி நீா் செல்லும் கிராமங்களான எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், அந்தியூா், பிரம்மதேசம், வேம்பத்தி மற்றும் ஆப்பக்கூடல் ஏரிக்கரைக்குச் செல்லும் நீா்வழிப் பாதைகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், கனமழை காரணமாக அந்தியூரில் நாளை திங்கள்கிழமை(அக்.17) மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி வெளியிட்டுள்ள உத்தரவில், அந்தியூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்தியூரில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் அந்தியூர் தனித் தீவாக மாறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com