
தமிழக அரசுத் துறைகளில் பட்டியலின, பழங்குடியின பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்க பதிவில், தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது!
அரசுத் துறைகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 10,402 பணியிடங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை. தேவையற்ற இந்த கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!
பட்டியலின, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவிலிருந்தும் மீண்டிருக்கும். அதை செய்யத் தவறியது சமூக அநீதி!
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி மூலம் அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழக அரசை ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.