
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது .
சசிகலாவுடன் மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், 'ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையில்தான் போயஸ் கார்டனில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் மயக்கமடைந்த பின்னர் நிகழ்வுகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
எய்ம்ஸ் மருத்துவர்கள், மேற்பார்வைக்காக வந்ததாகவும் மருந்துகள் எதுவும் பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
மருத்துவமனையில் இருந்தபோது, எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2012ல் ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்தபின்னர் இருவரிடமும் சுமூக உறவு இல்லை' உள்ளிட்ட தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.