திருப்பூர்: திருமுருகன்பூண்டி காப்பக குழந்தைகள் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருமுருகன்பூண்டியில் உள்ள தனியாா் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 3 சிறுவா்கள் உணவு ஒவ்வாமையால் வியாழக்கிழமை இறந்தனா்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியாா் ஸ்ரீ விவேகானந்த சேவாலய ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கடந்த புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்ட பின்னர் ஏற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள் கடந்த அக். 5ஆம் தேதி உயிரிழந்தனர். மேலும், 11 மாணவர்கள் மற்றும் காவலாளி என 12 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள அரசு காப்பகம் மற்றும் வீடுகளுக்கு சிலர் திரும்பினர்.
இதற்கிடையே கடந்த 7ஆம் தேதி திமுக கட்சி சார்பில் நிவாரண நிதியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் காப்பகத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், “குழந்தைகள் தங்கியிருந்த இடத்தை மெத்தனப்போக்காக கையாண்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் மூடப்படுகிறது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சமூகபாதுகாப்புத்துறையின் நன்னடத்தை அலுவலர் து.நித்யா (பொ) பதவி ஏற்றார்.
இந்நிலையில், 3 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.