
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்க உள்ளனர்.
உக்கடம் பகுதியில் கார் வெடித்த விவகாரம் தொடர்பாக தனிப்படை காவல் துறையினர் நடத்திய வழக்கு விசாரணை கோப்புகள், தடயங்கள் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காா் வெடித்து விபத்து ஏற்பட்டதில் உக்கடம் ஜி.எம். நகரைச் சோ்ந்த ஜமேஷா முபீன் (25) என்ற இளைஞா் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து அவருடன் தொடா்பில் இருந்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை யுஏபிஏ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஆறாவது நபராக அப்சர்கான் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவரிடம் கோவை மத்திய சிறையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-க்கு முழுமையாக மாற்றப்படுகிறது.
இதனால், தமிழக காவல்துறையிடமிருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்குகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.