ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலகிவிட்டு பொறுப்பற்ற வகையில் பேசட்டும் என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. 
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலகிவிட்டு பொறுப்பற்ற வகையில் பேசட்டும் என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. 

ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு பொறுப்பற்ற வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமா, அல்லது தன்னை நோக்கிய கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்ற தாகமா எனத் தெரியவில்லை.

சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத நச்சரவங்களை நாட்டில் நடமாட விடுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல!

 உதிர்க்கும் அபத்தவகைப்பட்ட கருத்துகளுக்கு எதிராகப் பலராலும் சொல்லப்படும் விளக்கங்களை அவர் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தன்னை மாற்றிக் கொண்டதாகவும் தெரியவில்லை. வழக்கம் போல, தனது பேச்சுகளைத் தொடர்ந்து கொண்டே வருகிறார்.

உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பற்ற நாடுகள்தான். மதச்சார்பற்ற நாடுகளில் எல்லாம் மதங்கள் உண்டு; அரசும் உண்டு. ஆனால் இரண்டுக்கும் தொடர்பு இல்லை. இது எதுவும் தெரியாமல், ‘எந்த ஒரு நாடும் ஏதாவது மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும்' என்று ஆளுநர் சொல்வது உலகம் அறியாப் பேச்சாகும்.

அனைத்து மதத்தவரும் சமம் (14), மதத்தில் பாகுபாடு கூடாது (15), அனைவருக்கும் சமமான உரிமை (16), விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு (25), தங்களது மதத்தைப் பிரச்சாரம் செய்ய உரிமை உண்டு (26), மதத்தை வளர்க்க வரி செலுத்தத் தேவை இல்லை (27), அரசு நிறுவனங்களில் மதக் கல்வி கூடாது (28), சிறுபான்மையினர் கல்வி நிறுவனம் நடத்த உரிமை உண்டு (30), மதம் தாண்டிய இணக்கம், சகோதரத்துவம் பரப்புவது ஒவ்வொரு குடிமகனின் கடமை (51A[e]),   மத அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் விடுபடுதல் இருக்கக் கூடாது (325) - இவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளவை. இவை அனைத்துக்கும் எதிராகப் பேசுகிறார் ஆளுநர்.

ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு அவர் பேசுவதால்தான் இந்தளவுக்கு இதற்கு முக்கியத்துவம் தர வேண்டி உள்ளது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com