
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு தின்பண்டங்கள் தர மறுத்து தீண்டாமை நடவடிக்கையில் ஈடுபட்ட இருவருக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜாமின் தாக்கல் செய்த மூன்று பேரில், கடையின் உரிமையாளருக்கு மட்டும் நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
பாஞ்சாங்குளத்தைச் சோ்ந்தமகேஸ்வரன் என்பவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரின் கடைக்கு வந்த பள்ளி மாணவா்கள் சிலரிடம் இருபிரிவினா் மோதலையும், அதனால் எடுக்கப்பட்டுள்ள பாரபட்ச முடிவையும் காரணம் சொல்லி தின்பண்டங்கள் கொடுக்க மறுத்துள்ளார்.
இந்த விடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரபை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர் உள்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் கடையின் உரிமையாளர் மகேஷ்வரன், ராமச்சந்திரன், சுதா ஆகியோரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி மூன்று பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் இன்று (அக்.31) விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, ராமச்சந்திரன், சுதா ஆகியோருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தார். அவர்கள் மீது ஏற்கெனவே ஒரு தீண்டாமை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் தீண்டாமை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருவருக்கும் ஜாமின் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
மேலும், கடையின் உரிமையாளர் மகேஷ்வரனுக்கு மட்டும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.