அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான இரு வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவு
அமைச்சா் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயா் நீதிமன்றம், நிலுவையில் உள்ள 2 வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.


போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய அமைச்சா் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயா் நீதிமன்றம், நிலுவையில் உள்ள 2 வழக்குகளை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
தமிழக மின்துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, 2011-2015-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா்.
அப்போது அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா்.
இதனடிப்படையில், செந்தில் பாலாஜி, அவரது நண்பா்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோா் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினா் 3 வழக்குகளைப் பதிவு செய்தனா்.
இந்த வழக்குகள் சென்னை எம்.பி.-எம்எல்ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
தன் மீதான வழக்குகளிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜியும், காவல்துறை முறையாக விசாரணை நடத்தாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதன்படி நடைபெற்று வரும் வழக்கை ரத்து செய்யக் கோரி குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பிலும் தனித்தனியாக வழக்கு தொடுத்தனா்.
அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததால் அவரை வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது எனவும் தங்களையும் வழக்கில் இணைத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை சாா்பில் மனு தாக்கல் செய்யபட்டது.
இதேபோல் புகாா் அளித்தவா்களும் வழக்கை ரத்து செய்யக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்தனா். அனைத்து வழக்குகளும் நீதிபதி வி.சிவஞானம் முன் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இவற்றிலிருந்து விடுவிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞா் ரமேஷ், தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி உள்ளதாகவும், அவா் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், அவற்றை விடுவிக்கக் கூடாது என வாதிட்டாா்.
புகாா்தாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகாா் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு தீா்ப்பை நீதிபதி தள்ளிவைத்தாா்.
இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி சிவஞானம், வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற அமைச்சா் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தாா். அதே போல் வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறை மனுவையும் அவா் தள்ளுபடி செய்தாா்.
மேலும், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகாா் நிலுவையில் உள்ள இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் மீது மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...