தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்:  ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழை பயிற்று மொழியாக அறிவித்து, தமிழறிஞர் முத்துச்சாமியின் பேசா நோன்பை முடிவுக்கு கொண்டு வந்து, அவரது நாவிற்குள் அடைபட்டுக் கிடக்கும் அன்னை தமிழுக்கு விடுதலை அளிக்க வேண்டும்
தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட வேண்டும்:  ராமதாஸ் வலியுறுத்தல்
Published on
Updated on
2 min read

தமிழை பயிற்று மொழியாக அறிவித்து, தமிழறிஞர் முத்துச்சாமியின் பேசா நோன்பை முடிவுக்கு கொண்டு வந்து, அவரது நாவிற்குள் அடைபட்டுக் கிடக்கும் அன்னை தமிழுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த இந்தியாவும் ஆசிரியர் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு பல்கலைக்கழகம், பள்ளிகளில் அன்னை தமிழுக்கு அங்கீகாரம் வேண்டி 1,626 ஆவது நாளாக வாய்ப்பூட்டு தவத்தை மேற்கொண்டிருக்கிறது. அப்பல்கலைக்கழகத்தின் நாவிற்குள் சிறைபட்டு கிடக்கும் அன்னை தமிழுக்கு விடுதலை அளிப்பதற்கான வரத்தை தமிழ்நாடு அரசு இன்னும் தாமதப்படுத்துவது வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையத்தில் நான்கரை ஆண்டுகளாக பேசா நோன்பு மேற்கொண்டிருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பெயர் தமிழறிஞர் டிட்டோனி க.இரா.முத்துச்சாமி. தமிழ் நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அவர் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழறிஞர் டிட்டோனி க.இரா.முத்துச்சாமிக்கு தமிழறிஞர்கள் வட்டாரத்தில் அறிமுகம் தேவையில்லை. தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி 1999 இல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்ட 102 தமிழறிஞர்களில் முதன்மை இடம் பிடித்தவர்களில் இவரும் ஒருவர். அதற்காக மொழிப்போர் மறவர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். தமிழை செம்மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த 2003-ஆம் ஆண்டு டெல்லியில் நாடாளுமன்றம் முன் நடத்தப்பட்ட பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் முதன்மையானவர் முத்துச்சாமி. அதற்காக செம்மொழிப் போராளி விருது பெற்றவர்.

தமிழ்ச் செம்மொழி கனவு நனவாகி விட்ட நிலையில், சாகும்வரை உண்ணாநிலை நடத்தி 20 ஆவது ஆண்டு தொடங்கியும் அந்த கனவு நனவாகாத வேதனையில் தான், தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் தமிழ் பயிற்றுமொழியாக அறிவிக்கப்படும் வரை ‘பேசா நோன்பு’ போராட்டத்தை மேற்கொள்வேன் என்று அவர் அறிவித்தார். அதன்படியே தமது எண்பதாம் ஆண்டு முத்துவிழா பிறந்தநாளான கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 1,626 நாட்களாக ஒருவருடனும், ஒரு சொல் கூட பேசவில்லை. முத்துசாமி அவர்களின் இந்த போராட்டம் குறித்து அறிந்த நாள் முதல், 80 ஆண்டுகளாக அவரது நாவில் நர்த்தனம் ஆடிய அன்னை தமிழ், அவரது வாயிலிருந்து மீண்டும் ஒலிக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

தமிழை பயிற்றுமொழியாக அறிவிப்பதில் எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லை. மத்திய அரசு சட்டமான கல்வி பெறும் உரிமை சட்டத்தின் 29 (எஃப்) பிரிவில், நடைமுறைக்குச் சாத்தியமான வரையில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வாசகத்தில் நடைமுறைக்குச் சாத்தியமாகும் வகையில் என்பதை மட்டும் நீக்கி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் அரசு திருத்தம் செய்து, அதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஆட்சியாளர்கள், தங்களின் அதிகாரவரம்புக்குட்பட்ட தமிழ் பயிற்றுமொழி சட்டத்தை இயற்றத் தயங்குவது முரணாக உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் செழிக்க வேண்டுமானால் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து தமிழ் பயிற்று மொழி சட்டத்தை அடுத்த பேரவைக் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் தமிழறிஞர் முத்துச்சாமியின் பேசா நோன்பை முடிவுக்கு கொண்டு வந்து, அவரது நாவிற்குள் அடைபட்டுக் கிடக்கும் அன்னை தமிழுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com