
அரசு இயந்திரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பயன்படுத்துகிறார்களென முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று 13 இடங்களில் சோதனை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.18.37 லட்சமும், 1.9 கிலோ தங்கமும் 8 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டன என தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
12 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். திமுக அரசு அரசு இயந்திரத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்தாமல் தனிநபர் மீதான காழ்ப்புணர்சியின் உச்சக்கட்ட நிகழவாக இந்த சோதனையை கருதுகிறேன். ஈபிஎஸ் மற்றும் கழக உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கு முன்னரும் இதுபோல சோதனை மேற்கொண்டுள்ளனர். தற்போது எதுவுமே கிடைக்காமல் என்னுடைய அலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர். என்னுடைய ஆதார், மனைவி மற்றும் குடும்பத்தினரின் ஆதார் அட்டைகள்தான் அவர்களுக்கு முக்கியமான ஆவணங்களா? என்னுடைய மகள் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் மீண்டும் எப்போது வருவீர்கள் என ஜாலியாக கேட்டார்.
அரசு விதிமுறைகளின்படிதான் நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். பல பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக செய்யப்பட்ட சோதனை இது. எந்தப் பணமும் கைப்பற்றப்படவில்லை. எனது வீட்டில் இருந்து இரண்டு அலைபேசி மட்டுமே கைப்பற்றப்பட்டதென எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.